கோவில்பட்டியில் ம.தி.மு.க. முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசியதாவது: உச்சநீதிமன்றம் தமிழக ஆளுநர் ஆர். என்.ரவியை கண்டிக்கும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை கொடுத்திருந்தனர். இந்திய அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு ஒரு ஆளுநராக எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி செயல்படாமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் இருந்தது.
குறிப்பாக தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமிப்பது தொடர்பாக அவரது தலையீடுகள் இருந்தது. இது போன்ற விஷயங்களை தமிழக ஆளுநர் தொடர்ந்து செய்து கொண்டு வந்திருக்கிறார். இதற்கு உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு கொடுத்துள்ளது. எப்போதும் தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி தன்னிச்சையாக ஒரு கூட்டத்தை கூட்டுகிறார். அவரது நடவடிக்கைகள் சரியில்லை என்று கூறி துணைவேந்தர்கள் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.
இதனை சரியான முடிவாகத்தான் பார்க்கிறேன். பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் இருந்தாலும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு அவரது செயல்பாடுகள் இருக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் அவர் கூட்டிய மாநாட்டிற்கு பல துணைவேந்தர்கள் செல்லாமல் இருப்பது நல்ல விஷயமாக தான் பார்க்கிறேன். எந்தவொரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது. காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் கொடுமையானது. இனி இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்கக்கூடாது, தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும். இந்த நேரத்தில் இதை அரசியலாக்க விரும்பவில்லை.
அரசு எடுக்கும் நடவடிக்கைகளினால் தீவிரவாதத்திற்கும், அவர்களை ஊக்குவிப்பவர்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ம.தி.மு.க.வை கடந்து வைகோ சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர், மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர், 30 ஆண்டுகளுக்கு மேலாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பணியாற்றியுள்ளார். தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். அதில் பல விஷயங்களில் வெற்றியும் அடைந்துள்ளார். வைகோவிற்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்க வேண்டும் என்பதனை தமிழகத்தின் குரலாக தான் பார்க்க வேண்டும் தவிர மதிமுகவின் குரலாக பார்க்க கூடாது. அரசியலை கடந்து வைகோ மாநிலங்களவை உறுப்பினராக போவது மதிமுகவிற்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது என்று நினைக்கிறார்கள், திமுக தலைமை கண்டிப்பாக பரீசிலிக்கும் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.