இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவராக 1994 முதல் 2003 வரை பணியாற்றியவர் கஸ்தூரி ரங்கன் (84). சமீப காலமாக உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார்.
இந்த நிலையில், வயது முதிர்வு காரணமாக, அவரது வீட்டில் இன்று காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் வைக்கப்படும் என்றும், நாளை அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
இஸ்ரோ முன்னாள் தலைவர் பத்ம விபூஷன் கஸ்தூரி ரங்கனின் மறைவுச் செய்தி அறிந்து வருந்தினேன். விண்வெளி ஆய்வில் இந்தியா மிகப் பெரும் உயரங்களை அடைவதற்கு வித்திடும் வகையில் பணியாற்றியவர் கஸ்தூரி ரங்கன். மிகச் சிறந்த அறிவியலாளராக இருந்ததோடு மட்டுமில்லாமல், மாநிலங்களவை உறுப்பினர், திட்டக்குழு உறுப்பினர், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வேந்தர் எனப் பல உயர்நிலைகளிலும் தனது அறிவாற்றலால் அப்பொறுப்புகளுக்கு அவர் பெருமை சேர்த்துள்ளார். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.