சமூக வலைத்தளங்களில் வரும் மோசடியான விளம்பரம் மற்றும் ஆசை வார்த்தைகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று தமிழக போலீஸ் துறையின் மாநில சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், கடந்த ஒருவாரத்தில் தமிழகத்தில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 14 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். அதன்படி, சென்னையை சேர்ந்த டாக்டரிடம் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தருவதாக ரூ.88 லட்சம் மோசடி செய்த சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த சஹாபுதீன் (வயது 44), கே.கே.நகரை சேர்ந்த முகமது உஸ்மான் (67), முகமது முனாவர் (41), அவரது மனைவி ஜமீலத் நசீரா (34) கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த சாஹித் அப்ரிடி (27), வஜபுல்லா (50), அவரது மனைவி பாத்திமா (45), ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் முஷ்டாக் அகமது (24) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கல்வி உதவித்தொகை பெற்றுத்தருவதாக மாணவ, மாணவிகளை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டதாக டெல்லியை சேர்ந்த ஆஷூ குமார் (29), அனுஜ் குமார்ஜா (21), சுபம் குமார் (22) ஆகிய 3 பேரை கைது செய்தனர். தஞ்சாவூர் போலீசார் டெல்லி சென்று குற்றவாளிகளை கைது செய்தனர்.
மும்பை போலீஸ் என கூறி ரூ.2,725 கோடி மோசடி செய்து விட்டதாக வேலூரை சேர்ந்தவரை மிரட்டி, டிஜிட்டல் கைது செய்து பணம் பறித்த கேரளாவைச் சேர்ந்த அகில், ஆஷிக், முகமது அஜ்மல் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 14 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.