இலங்கையின் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையும் அடுத்த பாப்பரசராக தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இடத்தை நிரப்பக்கூடியவர்களின் பெயர்களை வெளியிட்டுள்ள வொசிங்டன் எக்ஸாமினர் கர்தினால் மல்கம் ரஞ்சித்துடன் பிலிப்பைன்சின் கர்தினால் லூயிஸ் டக்லே, பிரான்சின் கர்தினால் ஜீன் மார்க் இத்தாலியின் கர்தினால் பியட்டிரோ பரோலின் ஆகியோரின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளது.
யுஎஸ் டுடேயும் மல்கம் ரஞ்சித்தின் பெயரை குறிப்பிட்டுள்ளது. யுஎஸ் டுடே கர்தினால் மட்டே சுப்பி, ஜேர்ஹாட் முல்லர், ரொபேர்ட் சரா, ரேய்மண்ட பேர்க் ஆகியோரின் பெயரையும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை சர்வதேச கத்தோலிக்க செய்தி ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ள டைம்ஸ் ஒவ் இந்தியா மல்கம் ரஞ்சித் பெரிதும் அறியப்படாத ஆனால் எதிர்பாராத விதமாக வெற்றிபெறக்கூடிய பாப்பரசராக கூடிய ஒருவர் என தெரிவித்துள்ளது.
மல்கம் ரஞ்சித்தின் பாரம்பரிய நிலைப்பாட்டை சுட்டிக்காட்டியுள்ள வொசிங்டன் டைம்ஸ் இலத்தீன் வழிபாட்டு முறை மற்றும் ஒருபாலின திருமணத்திற்கான எதிர்ப்பு ஆகியவற்றின் காரணமாக புதிய பாப்பரசரை தெரிவு செய்யவுள்ள கர்தினால்கள் மத்தியில் காணப்படும் பழமைவாத குரல் மல்கம் ரஞ்சித் என தெரிவித்துள்ளது.
அடுத்த பாப்பரசராக தெரிவு செய்யப்படக்கூடியவர் என எவரின் பெயரும் இன்னமும் குறிப்பிடப்படாத நிலையில், பல ஊடகங்களில் மல்கம் ரஞ்சித்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை கத்தோலிக்க திருச்சபைக்குள் அவருக்குள்ள மதிப்பினையும் அங்கீகாரத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.
ஐரோப்பியர் அல்லாத ஒருவர் தலைமை பொறுப்பை ஏற்கவேண்டும் என்ற அபிப்பிராயம் அதிகரித்துள்ள நிலையில் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் பெயர் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.