அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ், இத்தாலி பயணத்தை முடித்துக் கொண்டு, அங்கிருந்து 4 நாட்கள் பயணமாக இன்று (திங்கட்கிழமை) இந்தியா வருகிறார். அவருடைய மனைவியும், இந்திய வம்சாவளி பெண்ணுமான உஷா, குழந்தைகள் எவான், விவேக், மிராபெல் ஆகியோரும் உடன் வருகிறார்கள்.
அமெரிக்க ராணுவ தலைமையகமான ‘பென்டகன்’ உயர் அதிகாரி, அமெரிக்க வெளியுறவுத்துறை உயர் அதிகாரி உள்பட 5 உயர் அதிகாரிகளும் வருகிறார்கள். இன்று காலை 10 மணிக்கு ஜே.டி.வான்ஸ் விமானம், டெல்லி பாலம் விமான தளத்தில் தரை இறங்குகிறது. அவரை மூத்த மத்திய மந்திரி ஒருவர் வரவேற்கிறார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது வரிவிதிப்பு அறிவித்த பிறகு, ஜே.டி.வான்ஸ் முதல்முறையாக இந்தியா வருகிறார்.
டெல்லி வந்திறங்கிய சில மணி நேரங்களில், வான்ஸ் மற்றும் குடும்பத்தினர், சுவாமி நாராயணன் அக்ஷர்தாம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்கள். பாரம்பரிய இந்திய கைவினை பொருட்களை விற்பனை செய்யும் வணிக வளாகத்துக்கும் செல்கிறார்கள்.
இன்று மாலை 6.30 மணிக்கு பிரதமர் மோடி இல்லத்துக்கு ஜே.டி.வான்ஸ் மற்றும் குடும்பத்தினர் செல்கிறார்கள். அவர்களை பிரதமர் வரவேற்கிறார். அதைத் தொடர்ந்து, அங்கு பிரதமர் மோடி-ஜே.டி.வான்ஸ் இடையே பேச்சுவார்த்தை நடக்கிறது. இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதிக்கிறார்கள். இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் செய்து கொள்வது பற்றி முடிவு எடுக்கிறார்கள். வர்த்தகம், வரிவிதிப்பு, பிராந்திய பாதுகாப்பு ஆகியவை பேச்சுவார்த்தையில் இடம் பெறும்.
மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்றி, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய்மோகன் குவாத்ரா ஆகியோரும் மோடி தலைமையிலான இந்திய குழுவில் பங்கேற்கிறார்கள். பேச்சுவார்த்தையை தொடர்ந்து, ஜே.டி.வான்ஸ் மற்றும் குடும்பத்தினருக்கும், அமெரிக்க அதிகாரிகளுக்கும் பிரதமர் மோடி விருந்து அளிக்கிறார்.
அதைத்தொடர்ந்து, இன்று இரவு, ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூருக்கு வான்ஸ் குடும்பத்தினர் செல்கிறார்கள். 22-ந் தேதி, ‘யுனெஸ்கோ’ உலக பாரம்பரிய தல பட்டியலில் இடம் பெற்றுள்ள அம்பர் கோட்டைக்கு செல்கிறார்கள். அன்று பிற்பகலில், ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் சர்வதேச மையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் வான்ஸ் பங்கேற்று பேசுகிறார்.
23-ந் தேதி காலை, வான்ஸ், தனது குடும்பத்துடன் ஆக்ரா செல்கிறார். தாஜ்மகாலை சென்று பார்வையிடுகிறார். இந்திய கலைப்பொருட்கள் இடம் பெற்றுள்ள ‘ஷில்ப்கிராம்’ என்ற திறந்தவெளி கண்காட்சி நிலையத்தை பார்வையிடுகிறார். 23-ந் தேதி மாலை, வான்ஸ் குடும்பத்தினர் ஜெய்ப்பூருக்கு திரும்புகிறார்கள். மறுநாள் (24-ந் தேதி), ஜெய்ப்பூரில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்கள்.