யோ கேஸ்டில் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் சத்யா கரிகாலன் தயாரிப்பில், இசையமைப்பாளர் அஸ்வமித்ரா இயக்கத்தில், புதுமுக குழந்தை நட்சத்திர நடிகர் சித்தார்த் பன்னீர் சொந்த குரலில் தமிழ், தெலுங்கு , மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பாடி, நடனமாடியிருக்கும் மிஸ் மேல கிரஷ் எனும் காணொளி ஆல்பம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கவிப்பேரரசு வைரமுத்து, இசையமைப்பாளர் தேவா, நடிகர்கள் செந்தில், தம்பி ராமையா, கருணாஸ், இளவரசு, ரோபோ சங்கர், பிக்பாஸ் முத்துகுமரன், இயக்குநர்கள் சற்குணம், இரா. சரவணன், போஸ் வெங்கட், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சிமுருகன், காயத்ரி ரகுராம், மாஸ்டர் ராதிகா, சாண்டி மாஸ்டர், ராமர் ரவிக்குமார், கடம்பூர் ராஜா, ரத்தினம் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் கருப்பையா பன்னீர்செல்வம் வரவேற்றார். இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் அஸ்வமித்ரா பேசுகையில், மாஸ்டர் சித்தார்த்தை முதலில் வேறு ஒரு பாடலுக்காக தான் அணுகினேன். பெப்பியான அந்த பாடலை பாடமாட்டேன் என சொல்லி விட்டார். அதன்பிறகு ஒரு பாடலை உருவாக்கி கொண்டிருந்தபோது என் பின்னால் நின்று கொண்டு ஒரு பாடலை ‘ஹம்’ செய்தான். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உடனடியாக பாடுகிறாயா? என கேட்டேன். சொல்லிக் கொடுத்தால் பாடுவேன் என்றான் நம்பிக்கையுடன். அதன்பிறகு தான் இந்தப் பாடலை உருவாக்கினோம்.
சித்தார்த் திறமைசாலி. எதை சொல்லிக் கொடுத்தாலும் அதனை உடனடியாக கற்றுக்கொண்டு விடுவான். அதனால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளிலும் அவரே இந்தப் பாடலை பாடியிருக்கிறார். சிலம்ப வித்தையில் மாஸ்டர் சித்தார்த் நேஷனல் சாம்பியன்.
அவர் சிலம்பத்தில் தேசிய விருதினை வென்றவுடன் அது தொடர்பான பாடலையும் உருவாக்கி இருக்கிறோம். அந்தப் பாடலும் விரைவில் வெளியாகும். இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்களுக்கும், இந்த வீடியோ ஆல்பத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.