தமிழில் 90, 2000 காலகட்டத்தில் பிரபலமாக பேசப்பட்ட நடிகர் அப்பாஸ். அவருக்கென தனி ரசிகர் கூட்டம் இருந்தனர். கடந்த 2014ம் ஆண்டில் வெளியான ராமானுஜர் படத்திற்கு பிறகு அப்பாஸ் இதுவரை எந்தவொரு படங்களில் நடிக்கவில்லை. அதன்பின் அவர் குடும்பத்தோடு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டதாக கூறப்பட்டது. அதேசமயம் அவர் அங்குள்ள பெட்ரோல் பங்க், மெக்கானிக், கன்ஸ்ட்ரக்ஷன் என கிடைத்த வேலைகளை செய்து வந்ததாக தகவல் வந்தது.
தற்போது கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு பிறகு அப்பாஸ் மீண்டும் தமிழ் சினிமாவில் கால்தடம் பதிக்கிறார். அதன்படி, புஸ்கர் காயத்ரி தயாரிப்பில் நடிகை துஷாரா விஜயனை வைத்து சற்குணம் புதிய வெப் தொடர் ஒன்றை இயக்கி வருகிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அப்பாஸ் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு ஏற்கனவே 40 நாட்கள் நிறைவு பெற்றுள்ளது. இன்னும் 30 நாட்கள் படப்பிடிப்பு மீதமுள்ளது என்கிறார்கள்.