அவ்னி சினிமேக்ஸ் சார்பில் குஷ்பு சுந்தர், பென்ஸ் மீடியா சார்பில் அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கேங்கர்ஸ்’. இந்த படத்தில் சுந்தர் சி, வடிவேலு ஆகியோருடன் கேத்தரின் தெரசா, வாணி போஜன், முனீஷ்காந்த், பக்ஸ், மைம் கோபி, ஹரீஷ் பேரடி, அருள் தாஸ், கருப்புசாமி, சந்தான பாரதி, மதுசூதன ராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.
சுந்தர் சி இயக்கியுள்ள இப்படத்திற்கு, வசனங்களை வெங்கட் ராகவன் எழுதியுள்ளார். சி.சத்யா இசையமைத்துள்ளார். படத்தின் அறிமுக விழா தனியார் கல்லூரி ஒன்றில் நடந்தது.
விழாவில் சுந்தர்.சி பேசும்போது, “நானும் வடிவேல் அண்ணனும் மீண்டும் இணைந்து, உங்களை மகிழ்விக்க, உழைத்துள்ளோம். இந்தப்படம் ஆரம்பிக்க விதை போட்டது வடிவேல் அண்ணன் தான். தமிழில் ‘மணிஹெய்ஸ்ட்’ (புகழ்பெற்ற வங்கி கொள்ளை தொடர்பான வெப் தொடர்) மாதிரி ஒரு சின்ன ஊரில், ஆட்டோ ஓட்டுநர், டீச்சர் எல்லாம் வைத்து, பண்ணினால் எப்படி இருக்கும் என்பது தான் கதை. இந்தப்படத்திற்கு என்ன தலைப்பு வைப்பது எனத் திணறியபோது, வடிவேல் போற போக்கில் ‘கேங்கர்ஸ்’ என்றார். அதையே தலைப்பாக வைத்து விட்டோம். கண்டிப்பாக இப்படம் உங்கள் எல்லோரையும் சந்தோசப்படுத்தும்” என்றார்.
வடிவேலு பேசும்போது ” சுந்தர்.சியும் நானும் 15 வருடங்கள் பிரிந்திருந்தோம். இப்போது மீண்டும் சேர்ந்திருக்கிறோம். இந்தப்படம் நேற்று செய்த ‘வின்னர்’ படம் மாதிரி, அத்தனை புதிதாக இருக்கிறது. சுந்தர் சி ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து உருவாக்கியிருக்கிறார். 35 நாளில் இப்படத்தை முடித்து விட்டோம். உங்களுக்குத் தேவையான அத்தனை தீனியும் படத்தில் இருக்கிறது. இது தியேட்டரில் எல்லோரும் சேர்ந்து பார்த்து கொண்டாட வேண்டிய படம். சுந்தர் சி அண்ணன் அருமையாக எடுத்துள்ளார், என்னிடம் என்ன வாங்க வேண்டும் என, அவருக்கும் தெரியும் உங்கள் எல்லோருக்கும் கொண்டாட்டம் காத்திருக்கிறது” என்றார்.