அரச அதிகாரிகள் அவர்களது செயற்திறனின்மை மற்றும் தோல்வி என்பவற்றை மறைத்துக்கொள்வதற்கு ‘அரசியல் ஊழலை’ ஒரு கேடயமாகப் பயன்படுத்தக்கூடாது என வலியுறுத்தியிருக்கும் முன்னாள் வெளிவிகார அமைச்சர் அலி சப்ரி, அரச அதிகாரிகள் எவ்வித அச்சமும், பக்கச்சார்புமின்றி அவர்களது பணிகளை முன்னெடுப்பார்களாயின், எந்தவொரு அரசியல்வாதியினாலும் அரச சொத்துக்களைக் கொள்ளையிடமுடியாது எனத் தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகளில் அரச அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக முன்னாள் கணக்காய்வாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் எக்ஸ் தளப்பதிவொன்றைச் செய்திருக்கும் முன்னாள் அமைச்சர் அலி சப்ரி, அதில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
அரச அதிகாரிகள் ஊழல் மோசடிகளில் தொடர்புபட்டிருப்பதாக முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிட்டிருக்கிறார். இதனை நாம் நீண்டகாலமாகக் கூறிவருகிறோம். ஊழல் மோசடிகளில் அரசியல்வாதிகள் ஒரு அங்கமாக இருக்கிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இருப்பினும் இம்மோசடிகளில் அரசியல்வாதிகள் மாத்திரம் தனித்து ஈடுபடமுடியாது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
ஊழல் மோசடிகள் பல்வேறு மட்டங்களில் இடம்பெறக்கூடும். அவற்றில் பெரும்பங்கானவை அரசியல்வாதிகளுக்குத் தெரியாமலோ அல்லது அவர்களின் நேரடித்தொடர்பின்றியோ நடைபெறுகின்றன. பொதுமக்கள் அரசியல்வாதிகள் மீது கொண்டிருக்கும் கோபத்தின் பின்னால் ஒளிந்துகொள்ளக்கூடிய திறன்மிகுந்த ஊழல் அரச அதிகாரிகள் பலர் இருக்கிறார்கள். இதன் அர்த்தம் அரசியல்வாதிகள் ஊழலற்றவர்கள் என்பதல்ல.
இருப்பினும் அரச அதிகாரிகள் எவ்வித அச்சமும், பக்கச்சார்புமின்றி அவர்களது பணிகளை முன்னெடுப்பார்களாயின், எந்தவொரு அரசியல்வாதியினாலும் அரச சொத்துக்களைக் கொள்ளையிடமுடியாது. நிர்வாக மட்டத்தில் நிலவும் நேர்மைத்தன்மையும், தொழில்சார் நேர்த்தியும் மிகவலுவான தடுப்பு அரண்களாகும்.
அதேபோன்று அரச அதிகாரிகள் அவர்களது செயற்திறனின்மை மற்றும் தோல்வி என்பவற்றை மறைத்துக்கொள்வதற்கு ‘அரசியல் ஊழலை’ ஒரு கேடயமாகப் பயன்படுத்தக்கூடாது. மாறாக சகல மட்டங்களிலும் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படுவது அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.