இன்று அந்த பிள்ளையான் உங்களுக்கு மண்டேலாவாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அவன் எப்போதும் கிட்லர்தான்.
இது ஒரு பழங்கதை என்று நாம் புறக்கணித்து விட முடியாதது. கொலைவெறியர்களது இரத்தக் கறைகளுக்குள் மறைந்த கிடக்கும் நீண்ட கொடுமைகளின் கதை.தமிழ்மக்கள் விடுதலை புலிகள் என்கிற முன்னாள் ஒட்டு குழுவின் தலைவன் பிள்ளையானின் கதை.
அவன் அண்மையில் ஒரு நாள் இலங்கை பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டான்.
கைதுசெய்யப்பட்டவுடன் அரச வாகனத்தில் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்படுகிறான். கண்களை கட்டவில்லை. கைகளை கட்டி வதைக்கவில்லை.குளிரூட்டப்பட்ட வாகனத்தில் பயணமாகிறான் பிள்ளையான்.
கைது செய்தவர்களயும் அறிய முடிந்தது .அழைத்துச்செல்லும் இடமும் அறிய முடிந்தது .அடித்து துன்புறுத்துவதில்லை என்றும் தெரிகிறது.
நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்படுகிறான்.எதை விசாரிக்கிறார்கள் என்றும் தெரியும். எப்போது வரை விசாரிப்பார்கள் என்றும் தெரியும்.
தண்டனை என்னவென்றும் தெரியும்.யார் தண்டனை கொடுப்பார்கள் என்றும் தெரியும்.
முன்னைநாள் அமைச்சர் உதய கம்பன்பில அந்த பிள்ளையானை சிறையில் சந்திக்க அவகாசம் கோருகிறார் . முன்னைநாள் ஜனாதிபதி ரணில் சந்திக்கவும் அவகாசம் கோருகிறார் முன்னைநாள் இராணுவ புலனாய்வு பிரதானியும் பிள்ளையானை சந்திப்பதற்காக விண்ணப்பம் செய்கிறார் .
அரச தரப்பில் இருந்து முன்னைநாள் அமைச்சர் உதயகம்பன்பிலவுக்கு அந்த பிள்ளையானை சந்திக்க அனுமதியும் கிடைக்கிறது .
ஆனால், கடந்த காலங்களில் பிள்ளையான் பலரை கடத்தினார்…..
ஏன் கடத்துகிறார் என்று தெரியவில்லை. எங்கே கொண்டு போகபோகிறார்கள் என்று தெரியவில்லை. எப்படி, எதைப்பற்றி விசாரிப்பார்கள் என்று தெரியவில்லை.தண்டனை என்னவென்றும் தெரியவில்லை. வீடு திரும்புவோமா என்பதே தெரியவில்லை .
வெள்ளை வேனில் கடத்தினார்கள். அணிந்திருந்த மேல் சட்டையால் கண்களை இறுக்கி கட்டினார்கள். கைகளை கட்டினார்கள். ஆடு மாடுகளை போல் பின் இருக்கையில் தள்ளிவிட்டார்கள்.
அந்த வாகனத்தை முன்னோக்கி ஓட்டினார்கள். பின்னோக்கி ஓட்டினார்கள்.ஆடைகளை களைந்து அரைகுறையாக ஆக்கினார்கள்.
பல மணி தேரம் வாகனத்தை ஓட்டி, தலைசுற்றி, வாந்தி எடுக்கவைத்து உயிர் ஊசலாடும் நிலையில் எவருமே அறிந்திராத காடொன்றிற்குள் கொண்டு சென்று இறக்கினார்கள்.
மர நிழலில் படங்கொன்றை விரித்து அதன் மேல் அவர்களை அமர்த்தினார்கள். கைகளை பின்பக்கமாக இழுத்து கணுக்களில் கட்டினார்கள் .
ஆள் மாறி ஆள்,அடிக்க தொடங்கினார்கள். கையில் கிடைத்த பொல்லுகள், இரும்பு கம்பிகள், துடுப்பாட்ட மட்டைகள், விக்கட்டுகள் என பலவற்றாலும் தங்கள் வலிமைக்கேற்ப அடித்தார்கள்.
மண்டைகள் பிளந்தன, முக தாடைகள் உடைந்தன, கால் கை எடும்புகள் நொருங்கின.
ஒவ்வொருவரும் பதை பதைத்தார்கள். குருதி பீறிட்டு பாய்ந்தது. மயங்கி விழும் வரைக்கும் அடித்தார்கள். பின் தண்ணீரை முகத்தில் தெளித்து உணர்வு வந்தபின் மீண்டும் அடித்து நொருக்கினார்கள்.
கைதிகள் யாவரும் வாய்விட்டு அழுதனர். மரண ஓலம் எழுப்பினர். அடிக்கவேண்டாம் என்று இறைஞ்சினர்.
எனக்கு குடும்பம் இருக்கிறது,…. பிள்ளைகள் இருக்கிறார்கள்…. என்னை கொன்றுவிடாதீர்கள் என்று மன்றாடினார்கள்.
எனக்கு கடன் இருக்கிறது. என்னை கொன்றுவிட்டால் என் மனைவி நிர்க்கதியாகி போவாள். மனமிரங்குங்கள் என்று வேண்டினார்கள்.
பிள்ளையானின் சகாக்கள் எவருக்குமே இரக்கம் வரவில்லை .ஓயாமல் அடித்தார்கள். ஒப்பாரி சத்தம் முனகல் ஆகும் வரை அடித்து துவைத்தார்கள்.
பின் அனைவரையும் மணலில் இழுத்து எறிந்தார்கள். படங்கை ஆளுக்கொரு முனையில் பிடித்து சரித்து, வடிந்துகிடந்த இரத்தத்தைக் மணல்மேல் ஊற்றினார்கள்.
மீளவும் அதே படங்கை விரித்து, அந்த படங்குகளில் அவர்களை கிடத்தினார்கள். இரத்த வாடை கண்டு இலையான்கள் தேடிவந்து மொய்த்தன. வடிந்த குருதியையும் வடியாத கண்டலையும் தமது முக்கால் துளைத்து உறிஞ்சின. காதுகளில் போய் இரைந்தன.
அந்த இலையானகளை துரத்துவதற்கு கூட அவர்கள் நாதியற்று கிடந்தார்கள்.
அந்த நேரத்தில்தான் பிள்ளையான் அங்கு வந்தான். வெற்றி களம் ஒன்றில் மடிந்து கிடக்கும் எதிரிகளை பார்வையிடும் மன்னன் போல, இல்லாத நெஞ்சை நிமிர்த்தி நிமிர்த்தி சுத்திவந்தான்.
“எல்லாரையும் போடுங்க” என்று தீர்ப்பளித்து விட்டு நகர்ந்தான் அந்த பாதகன். ஏன் இவர்களை அடித்தீர்கள்? என்ன குற்றத்மை கண்டீர்கள்? என்று தன் தொண்டன் எவனிடமும் எந்த கேள்வியும் இல்லை.
மிருகமான அவனது தொண்டர்கள் குற்றுயிராய் கிடந்த அனைவரையும் வாகனமொன்றில் அள்ளி ஏற்றினார்கள்.
நள்ளிரவில் வாகனம் ஊர்மனை நோக்கி வரைந்தது .
நடு நகரில் அத்தனை கைதிகளையும் தூக்கி வீசினார்கள். சிலரது கழுத்துகளில் கத்தியால் குத்தி கொன்றார்கள். சிலரை துப்பாக்கியால் தலையில் சுட்டு கொன்றார்கள் .
வெடிச்சத்தம் கேட்டு ஊர்மக்கள் அமைதியாக இருட்டு அறைகளில் ஒதுங்கிகொண்டார்கள். நாய்கள் மட்டும் மடிந்துபோன அந்த அப்பாவிகளுக்காக ஓலமிட தொடங்கின.
பாதகர்களது வாகனம் காற்றில் பறந்து போனது.
ஏன் கொல்லப்படுகிறோம் என்று தெரியாமலே அந்த அப்பாவிகளது உயர்கள் ஓய்ந்து போயின.
அதிகாலை 5 மணிக்கு அந்த கிராமத்து மக்களின் பேரவலம் தொடங்குகிறது.தமது ஊர்ப்பிறந்த குழந்தைகள் தெரிவிலே பிணமாக கிடப்பது கண்டு ஆர்ப்பரித்து அழுகின்றனர் அப்பாவி மக்கள் .
பிள்ளையானின் குழுவினர் அதிகாலையில் அடுத்த ஊரில் அப்பாவிளை கடத்துவதற்கு தயாராகினர். மட்டக்களப்பில் உள்ள 800ற்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒரு கிராமத்திற்கு ஒருவரையேனும் பிள்ளையான் கொன்று தின்றிருப்பான். அவன் கொலை செய்யாத ஊர்களே இல்லை எனலாம்.
ஈழ விடுதலைக்காக போராடி கண்களை இழந்து, அவையவங்களை இழந்து காப்பகத்தில் வசித்த முன்னை நாள் சகாக்களான புலி வீர்ர்களையே கேள்விகள் ஏதுமின்றி கொன்று தீர்த்தவன் அவன்.
இத்தகைய கொலைகளை கண்டு பயந்து ஓலமிடும் மக்களால் கொலைஞர்களை நோக்கி சாபமிடகூட முடியவில்லை .
அப்படி யாரும் சாபமிட்டு அழுதுவிட்டால் மறுநாளே அவர் பிணமாகி போவார் .இவ்வாறானா ஈவிரக்கமற்றவனாகவே அந்த பிள்ளையானும் அவனது சகாக்களும் இயங்கினர்..
அன்று பிள்ளையானின் தொண்டர்களாக இருந்த கொலைஞர்கள், இன்று பிள்ளையானின் கைதை சோகமாக தூக்கி கொண்டு, மண்டேலாவை கைது செய்துவிட்டதாகவே கூவுகின்றனர்.
இன்று அந்த பிள்ளையான் உங்களுக்கு மண்டேலாவாக இருக்கலாம்.எங்களுக்கு அவன் எப்போதும் கிட்லர்தான்.
இந்த இயற்கை இந்த மண்ணில் எத்தனை காலம்தான் ஆனாலும் “எந்தவொரு தாக்கத்திற்கும் சமனும் எதிருமான மறுதாக்கத்தை”வழங்கியேதீரும்.