மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள தியாவட்டுவான் பகுதியில் 4 கஜமுத்துக்களை விற்பனை செய்ய முயற்சித்த நபர் ஞாயிற்றுக்கிழமை (30) விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை கடதாசி ஆலை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய சம்பவதினமான நேற்று இரவு 7.00 மணியளவில் விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி ரத்நாயக்கா தலைமையிலான குழுவினர் குறித்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போததே கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
அங்கு கஜமுத்துக்களை விற்பனை செய்ய முற்பட்ட மூதூர் ஆலிம் நகரைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரை சுற்றிவளைத்து கைது செய்ததுடன் அவரிடமிருந்து 4 கஜ முத்துக்களை கைப்பற்றியுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவரையும் கைப்பற்றப்பட்ட சான்று பொருட்களையும் விசேட அதிரடிப்படையினர் பொலிஸாரிடம் ஒப்படைத்ததையடுத்து அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.