Wednesday, April 2, 2025
spot_img
Homeஇந்திய செய்திகள்ஓய்வு பெறுகிறாரா பிரதமர் மோடி? - சஞ்சய் ராவத்தின் கருத்தால் சர்ச்சை!

ஓய்வு பெறுகிறாரா பிரதமர் மோடி? – சஞ்சய் ராவத்தின் கருத்தால் சர்ச்சை!

பிரதமர் மோடி தனது ஓய்வை அறிவிக்கவே ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றதாக சிவசேனை(யுபிடி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள ஆா்எஸ்எஸ் அமைப்பின் தலைமையகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்தார்.

பிரதமராக பதவியேற்றதற்குப் பின்னர், அதாவது 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் முதல்முறையாக ஆர்ஆர்எஸ் தலைமை அலுவலகம் சென்றது குறிப்பிடத்தக்கது.

அங்கு ஆா்எஸ்எஸ் நிறுவனா் கே.பி. ஹெட்கேவாா், அமைப்பின் இரண்டாம் தலைவா் எம்.எஸ்.கோல்வல்கா் ஆகியோரின் நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, அங்கு வைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் அஸ்திக்கு மரியாதை செலுத்தினார். மேலும் மாதவ் நேத்ராலயா கண் மருத்துவ நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புதிய விரிவாக்கக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டி விழாவில் உரையாற்றினார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ஓய்வை அறிவிக்கவே ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்துக்கு நேற்று சென்றதாக சிவசேனை(யுபிடி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த 10-11 ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்குச் செல்லாத பிரதமர் நரேந்திர மோடி, தற்போது சென்றுள்ளார். அவருடைய ஓய்வு விண்ணப்பத்தை அளிக்க அவர் அங்கு சென்றிருக்கலாம். ஆர்எஸ்எஸ் அமைப்பு, இந்த நாட்டின் தலைவரை மாற்ற விரும்புவதாகவே நான் நினைக்கிறேன். பிரதமர் மோடியின் காலம் முடிந்துவிட்டது. அவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். பாஜகவிற்கும் அடுத்த தலைவரை தேர்வு செய்ய விரும்புகிறார்கள்.

அதன்படி அடுத்த பிரதமரை ஆர்எஸ்எஸ்தான் தேர்வு செய்யும். அவர் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவராக இருப்பார். இதுகுறித்து விவாதிக்காகவே ஆர்எஸ்எஸ் அலுவலகத்துக்கு வர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

சஞ்சய் ராவத்தின் இந்த கருத்து அரசியலில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஹுசைன் தல்வாய் சஞ்சய் ராவத்தின் கருத்து சரியானது என்று கூறியுள்ளார். ’75 வயதைக் கடந்தவர்களுக்கு ஆர்எஸ்எஸ் ஓய்வினை அறிவித்துவிடுவார்கள். பிரதமர் மோடிக்கு வயதாகிறது. அதனால் ஆர்எஸ்எஸ் அவருடைய ஓய்வு குறித்து ஆலோசிக்கலாம். ஆர்எஸ்எஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு. விஎச்பி மற்றும் பஜ்ரங் தளம் போன்ற பயங்கரவாத அமைப்புகளையும் உருவாக்கியுள்ளது” என்று கூறியுள்ளார்.

பாஜக தரப்பில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ், இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். 2029 ஆம் ஆண்டிலும் மோடிதான் பிரதமர் ஆவார் என்று கூறியுள்ளார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments