Monday, June 8, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்“கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

“கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாகும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை பல வருடங்களாக முன்வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கச்சத்தீவை மீண்டும் திரும்ப பெறுவதற்கான அரசின் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வந்தார்.

இது குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “இலங்கையில் ஆட்சி மாறினாலும் தமிழக மீனவர்களின் நிலை மாறவில்லை. கச்சத்தீவை மாநில அரசுதான் தாரை வார்த்ததாக திமுகவிற்கு எதிராக அரசியல் செய்யப்படுகிறது. கச்சத்தீவு ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி கடுமையாக எதிர்த்தார்.

நாடாளுமன்றத்திலும் திமுக கடுமையாக எதிர்த்தது. கச்சத்தீவு ஒப்பந்தத்தில் திருத்தம் தேவை என தமிழக சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தீர்மானம் நிறைவேற்றினர். மீனவர்கள் விவகாரத்தில் பாஜக அரசு இதுவரை ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை. இலங்கை கடற்படை நாள் ஒன்றுக்கு 2 மீனவர்கள் வீதம் கைது செய்கிறது. கடந்த 2024-ம் ஆண்டு மட்டும் 530 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க 74 முறை கடிதங்கள் எழுதியுள்ளேன். தமிழக மீனவர்களை போல் மற்ற மாநிலங்களில் மீனவர்கள் கைது செய்யப்பட்டால் பார்த்து கொண்டிருப்பார்களா? மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாகும். தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டவும், இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களை போக்கிடவும் கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தர தீர்வாக அமையும். இதனை கருத்தில் கொண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அரசு முறைப் பயணமாக இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அரசுடன் பேசி, அந்நாட்டு சிறையில் உள்ள நமது மீனவர்களையும், அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டு கொண்டுவர வேண்டுமென்றும் இந்த பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது”. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments