10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்துள்ள 17 சீசன்கள் முடிவில் சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 கோப்பைகளை வென்று சாம்பியன் அணிகளாக திகழ்கின்றன.
இந்த தொடரில் மும்பையில் இன்று நடைபெறும் 12வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில், இந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் மொயீன் அலி தனது ஆல்-டைம் ஐ.பி.எல் லெவனை தேர்வு செய்துள்ளார்.
மொயீன் அலி தேர்வு செய்த அணியில் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெயில் மற்றும் விராட் கோலியை தேர்ந்தெடுத்துள்ளார். தொடர்ந்து 3வது இடத்தில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ஆல் ரவுண்டர் கைரன் பொல்லார்டை தேர்வு செய்துள்ளார். 4வது வரிசையில் விக்கெட் கீப்பர் எம்.எஸ். தோனியை தேர்வு செய்த மொயீன் அலி அவரை கேப்டனாக நியமித்துள்ளார்.
இதையடுத்து ஆல்ரவுண்டர்கள் ஹர்திக் பாண்ட்யா, ஆண்ட்ரே ரசல் மற்றும் டுவைன் பிராவோவை தேர்வு செய்த மொயீன் அலி பந்துவீச்சாளர்களாக ரஷித் கான், ரவீந்திர ஜடேஜா, ககிசோ ரபாடா, ஜஸ்ப்ரித் பும்ராவை தேர்வு செய்துள்ளார். மொயீன் அலி தேர்வு செய்த அணியில் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, டி வில்லியர்ஸ், டேவிட் வார்னர் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெறவில்லை.
மொயீன் அலி தேர்வு செய்த அணி: கிறிஸ் கெய்ல், விராட் கோலி, கைரன் பொல்லார்டு, எம்.எஸ்.தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ஆண்ட்ரே ரசல், டுவைன் பிராவோ, ரஷித் கான், ரவீந்திர ஜடேஜா, காகிசோ ரபாடா, ஜஸ்ப்ரீத் பும்ரா.