கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள கானாபூர் பகுதியை சேர்ந்தவர் சந்தன் நாசரேத்(வயது 82). இவர் மராட்டிய அரசு தலைமை செயலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது மனைவி பிலேவியானா(வயது 79). இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லாத நிலையில், இருவரும் தனியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை சந்தன் மற்றும் பிலேவியானா ஆகிய இருவரும் அவர்களது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இது குறித்து அக்கம்பக்கத்தினர் போலிசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், போலீசார் விரைந்து வந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அவர்களின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 2 பக்க கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அந்த கடிதத்தை சந்தன் எழுதியுள்ளார். அதில், தானும் தனது மனைவியும் யாருடைய தயவிலும் வாழ விரும்பவில்லை என்றும், தங்கள் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தன் தனது கழுத்தில் கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனவும், அவரது கைகளிலும் காயங்கள் இருந்தது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். பிலேவியானா விஷம் குடித்திருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே முழு விவரங்கள் தெரியவரும் என்று போலீசார் கூறியுள்ளனர்.
அதே சமயம், சந்தன் தனது தற்கொலை கடிதத்தில் சுமித் மற்றும் அணில் யாதவ் ஆகிய இரண்டு நபர்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார். சுமித் என்ற நபர் டெல்லி தொலைத்தொடர்புத் துறை அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி சந்தனிடம் பேசியுள்ளார். சந்தனின் பெயரில் போலி சிம் கார்டு வாங்கப்பட்டு சட்டவிரோத நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
பின்னர் அணில் யாதவ் என்ற நபர் சி.பி.ஐ. அதிகாரி போல் பேசியுள்ளார். சந்தனின் சொத்து விவரங்களை அவர் கேட்டுள்ளார். பின்னர் சந்தன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறி மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன சந்தன், மோசடிக்காரர்களின் வங்கி கணக்கிற்கு சுமார் ரூ.50 லட்சம் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அவர்கள் மேலும் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
இதற்காக சந்தன்-பிலேவியானா தம்பதியினர் தங்கள் நண்பர்கள் சிலரிடம் கடன் வாங்கியுள்ளனர். மேலும் கடந்த ஜூன் 4-ந்தேதி ரூ.7.15 லட்சத்திற்கு தங்க நகைக் கடன் வாங்கியதாக சந்தன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த நகை விற்கப்பட்டு தங்கள் கடன்கள் அடைக்கப்பட வேண்டும் என்று சந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். அதோடு, தற்கொலைக்கு பிறகு தங்கள் உடல்களை மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்க வேண்டும் என்றும் சந்தன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தற்கொலை கடிதத்தின் அடிப்படையிலும், முதற்கட்ட விசாரணையின் பேரிலும், போலீசார் சைபர் மோசடி மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அமித் மற்றும் அணில் யாதவ் ஆகிய இரு நபர்களின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.