மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் நேற்று அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவான நிலையில், நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தில் மியான்மரில் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. மேலும் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. அங்கு மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடக்கும் என நிலநடுக்கத்திற்கான அமெரிக்க ஆய்வு மையம் யு.எஸ்.ஜி.எஸ். கணித்துள்ளது. இன்று மட்டும் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். தற்போது மதியம் 2.50 மணியளவில் ரிக்டர் அளவில் 4.7 ஆக நிலநடுக்கம் பதிவானதாக நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.