மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் நேற்று அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவான நிலையில், நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தில் மியான்மரில் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. அங்கு மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர் மற்றும் தாய்லாந்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் ‘ஆபரேஷன் பிரம்மா’ மூலம் இந்தியா சார்பில் மியான்மர் மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள், மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இதுவரை மியான்மருக்கு சுமார் 15 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, மீட்புப் பணிகளில் உதவுவதற்காக இந்தியாவில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் 80 பேர் மியான்மருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியவர்களை கண்டுபிடித்து மீட்க மோப்ப நாய்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.