Wednesday, November 11, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்கு புதிய வசதி: 6 மொழிகளில் அறிமுகமான இணையதள செயலி!

சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்கு புதிய வசதி: 6 மொழிகளில் அறிமுகமான இணையதள செயலி!

சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடப்பு மண்டல மற்றும் மகர விளக்கு சீசனை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக ஆறு மொழிகளில் புதிய இணையதள செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் எதிர்வரும் 16ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படவுள்ளதுடன், 17ஆம் திகதி முதல் மண்டல பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகவுள்ளன.

இந்நிலையில், சபரிமலை தொடர்பான அனைத்து தகவல்களையும் பக்தர்கள் இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் sabariportaldcpta.in என்ற புதிய இணையதள செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் நிசாமுதீன் தெரிவிக்கையில், இந்தப் புதிய இணையதள செயலி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கையடக்கத் தொலைபேசி மற்றும் கணினி ஊடாக இந்தச் செயலியைப் பயன்படுத்த முடிவதுடன், QR குறியீடு வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், WhatsApp Chatbot வசதியும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் ஊடாக ஐயப்ப பக்தர்கள் சபரிமலை தொடர்பான தகவல்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

குறிப்பாக, காணாமல் போனவர்கள் மற்றும் தவறவிடப்பட்ட பொருட்கள் தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்யவும், அவற்றுக்கான உடனடி நடவடிக்கைகளைப் பெற்றுக்கொள்ளவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், இணையவழி முன்பதிவு, வாகன நிறுத்துமிடங்கள், ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து தொடர்பான தகவல்களையும் இந்த இணையதளத்தின் ஊடாக அறிந்துகொள்ள முடியும்.

இந்தச் சேவைகள் அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சபரிமலை தரிசனத்திற்கான இணையவழி முன்பதிவு வசதி நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது பக்தர்களுக்குத் தேவையான பல்வேறு தகவல்களையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய இணையதள செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நடப்பு சீசனை முன்னிட்டு சபரிமலையில் 30 இலட்சம் டின் அரவணை பிரசாதம் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments