Tuesday, November 10, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்மோடியுடனான உறவு குறித்து சோனியா காந்தி வெளியிட்ட தகவல்!

மோடியுடனான உறவு குறித்து சோனியா காந்தி வெளியிட்ட தகவல்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தனக்கு நேரடியான தனிப்பட்ட தொடர்புகள் எதுவும் இருந்ததில்லை என்றும், நேரில் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் அவர் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்து வந்ததாகவும் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி தனது புதிய சுயசரிதைப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஹார்பர்கொலின்ஸ் இந்தியா பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ‘Belonging: A Journey of Love’ என்ற தலைப்பிலான அவரது புதிய புத்தகம் தற்போது இந்திய அரசியல் வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.

நாடாளுமன்றத்தில் மாத்திரமே சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியுடன் நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களின் நிறைவின்போது சபாநாயகரின் அறையில் நடைபெறும் கூட்டங்களிலேயே சந்தித்துக்கொள்வதாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

அந்தச் சந்தர்ப்பங்களில் ஏனைய தலைவர்கள் முன்னிலையில் இருவரும் முறைப்படி வணக்கம் தெரிவித்துக்கொள்வதாகவும், அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் தலைவர்களிடையே காணப்பட்ட நட்புறவான சூழல் தற்போது இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண் பார்ப்பதைத் தவிர்க்கும் மோடி?

நேருக்கு நேர் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் பிரதமர் மோடி தன்னை நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்த்து முகத்தைத் திருப்பிக்கொள்வதாகவும் சோனியா காந்தி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிய சில சந்தர்ப்பங்களில் மோடி தனது நலனை விசாரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அப்போது, ‘நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?’ என மோடி கேட்டதாகவும், அதற்குத் தான் நலமாக இருப்பதாகப் பதிலளித்ததாகவும் அந்த அனுபவத்தை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

கொள்கை ரீதியான வேறுபாடுகள்

தனக்கும் பிரதமர் மோடிக்கும் இடையிலான முரண்பாடுகள் தனிப்பட்ட மோதல்கள் அல்ல எனக் குறிப்பிட்டுள்ள சோனியா காந்தி, அவை அடிப்படையில் கொள்கை மற்றும் சித்தாந்தம் சார்ந்தவை எனத் தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்ட தேசியக் கண்ணோட்டத்திற்கும், இந்தியாவின் பன்முகத்தன்மை, மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதியை வலியுறுத்தும் தமது அரசியல் சித்தாந்தத்திற்கும் இடையில் அடிப்படை வேறுபாடுகள் காணப்படுவதாகவும் அவர் தனது புத்தகத்தில் விளக்கியுள்ளார்.

சோனியா காந்தியின் இந்தக் கருத்துகள் இந்திய அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments