Wednesday, November 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்யாழில் ‘மெட்ரோ’ பேருந்து சேவை

யாழில் ‘மெட்ரோ’ பேருந்து சேவை

நாட்டின் நகர்ப்புற பொதுப் போக்குவரத்துச் சேவையை நவீனப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘மெட்ரோ’ நகர்ப்புற ஆடம்பரப் பேருந்துச் சேவையை (Urban Luxury Transport) யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் விரிவுபடுத்துவதற்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு கட்டமாக, யாழ்ப்பாண நகரில் மெட்ரோ பேருந்துகளை இயக்குவதற்கான பாதைகளை அடையாளம் காணுதல் மற்றும் தொழில்நுட்ப சாத்தியப்பாடுகளை ஆராயும் நோக்கிலான வீதி ஆய்வும் பரீட்சார்த்தமும் நேற்று (10) முன்னெடுக்கப்பட்டன.

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன ஆகியோரின் தலைமையில் இந்நடவடிக்கைகள் இடம்பெற்றன.

முன்னதாக யாழ்ப்பாணம் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வட மாகாணத் திட்டப் பணிப்பாளர் அலுவலகத்தில் ஆரம்பகட்டக் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,

கொழும்பில் வெற்றி அளித்துள்ள இச்சேவையை 2029ஆம் ஆண்டு வரையிலான தேசிய விரிவாக்கத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், 2027ஆம் ஆண்டு நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்திற்கான மெட்ரோ பேருந்துச் சேவையை முறைப்படி ஆரம்பிப்பதை இலக்காகக் கொண்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, 2026ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் 10 பேருந்துகளுடன் முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட மெட்ரோ பேருந்துச் சேவை, தற்போது 122 பேருந்துகளுடன் மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய 7 வழித்தடங்களில் இயங்கி வருவதாகப் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன சுட்டிக்காட்டினார்.

100 சதவீத அரசாங்க நிதி ஒதுக்கீட்டில் இலங்கை மெட்ரோ ட்ரான்சிட் நிறுவனத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் அடுத்த கட்டமாகவே யாழ்ப்பாணம் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகள் விசேட குழுவின் மூலம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments