அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளை தாக்கிய சக்திவாய்ந்த ‘நார்ஈஸ்டர்’ புயல் காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளத்தில், குடியிருப்பு பகுதிக்குள் சுறா ஒன்று நீந்திச் சென்ற காட்சி சமூக வலைத்தளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
நியூ ஜெர்சி உள்ளிட்ட அமெரிக்காவின் வடகிழக்கு பகுதிகளை கடந்த 26ஆம் திகதி ‘நார்ஈஸ்டர்’ புயல் தாக்கியது.
மணிக்கு சுமார் 70 மைல் வேகத்தில் வீசிய பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் பல பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நியூ ஜெர்சியின் கடலோரப் பகுதியான சர்ப் சிட்டியிலும் வெள்ளம் ஏற்பட்ட நிலையில், அங்கு வசிக்கும் ட்ரூ ப்ரோகாசினோ என்பவர் தனது வீட்டுக்கு அருகில் சுறா ஒன்று வெள்ளநீரில் நீந்திச் செல்வதை அவதானித்துள்ளார்.
சுமார் நான்கு அடி உயரத்துக்கு வெள்ளநீர் சூழ்ந்திருந்த நிலையில், சுறாவின் முதுகுத் துடுப்பு தண்ணீருக்கு மேலே தெரிந்தபடி அவரது வீட்டின் வாகன நிறுத்துமிடம் வரை நீந்திச் சென்றுள்ளது.
இதனை அவர் தனது கையடக்கத் தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்துள்ளார்.
இந்த காணொளியை ஆய்வு செய்த கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர் டாக்டர் கிரெக் ஸ்கோமல், அதில் காணப்படுவது அந்தப் பிராந்திய கடலோரப் பகுதிகளில் பொதுவாகக் காணப்படும் ‘ஸ்மூத் டாக்பிஷ்’ (Smooth Dogfish) வகை சிறிய சுறா என அடையாளம் கண்டுள்ளார்.
இந்த வகை சுறாக்கள் நண்டுகள் மற்றும் சிறிய மீன்களை உணவாகக் கொள்வதுடன், மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளநீர் வடியத் தொடங்கிய பின்னர் குறித்த சுறா மீண்டும் விரிகுடா பகுதிக்கு சென்றதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புயல் மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மத்தியில், குடியிருப்பு பகுதிக்குள் சுறா நீந்திச் சென்ற காட்சி தற்போது இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.


