கனடாவின் ரொறன்ரோ நகரின் மேற்கு பகுதியில், திருநங்கைகளுக்கு எதிரான வெறுப்புணர்வு காரணமாக இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் 31 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை, லான்ஸ்டவுன் அவென்யூ மற்றும் டுபொன்ட் வீதி சந்திப்புக்கு அருகில் பெண் ஒருவர் தனது நாயுடன் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, சந்தேகநபர் அவரை அணுகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, சந்தேகநபர் திருநங்கைகளுக்கு எதிரான அவதூறான கருத்துக்களை வெளியிட்டதுடன், குறித்த பெண்ணைத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அவரைக் கொலை செய்வதாகவும் சந்தேகநபர் அச்சுறுத்தியதாக பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
எனினும், இந்தச் சம்பவத்தில் குறித்த பெண்ணுக்கு உடல் ரீதியான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற அதே நாளில் பொலிஸார் சந்தேகநபரைக் கண்டறிந்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் ரொறன்ரோவைச் சேர்ந்த 31 வயதுடைய Ellan Michelle Wood என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவருக்கு எதிராக வெறுப்புணர்வு நோக்கிலான தாக்குதல், வெறுப்புணர்வு நோக்கிலான கொலை மிரட்டல், விடுதலை உத்தரவை மீறியமை மற்றும் நன்னடத்தை விதிகளை மீறியமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.


