திபெத்தில் ஏற்கனவே இருந்த தடுப்பு ஏரிக்குக் கீழ்நோக்கிய பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, புதிதாக மற்றொரு ஏரி உருவகியுள்ளதாகச் சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக உருவான முந்தைய தடுப்பு ஏரி, கூடுதல் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலைகளுக்கு மத்தியில், இயற்கை முறையிலேயே வற்றி வந்ததாகக் கூறப்பட்ட நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கண்காணிப்பு ட்ரோன் ஒன்று நேற்று(30) இந்த நிலச்சரிவை கண்டறிந்ததாகவும், அதன் இடிபாடுகள் ஆற்று நீரை மறித்து புதிய தடுப்பு ஏரியை உருவாக்கியுள்ளதாகவும் சீன மத்திய தொலைக்காட்சி (CCTV) தெரிவித்துள்ளது.
புருவ்க்பு சியாங் சாங்பு (Pruqpu Qiang Zangbu) நதியில் அமைந்திருந்த தடுப்பு ஏரிக்குக் கீழ்நோக்கிய பகுதியில், சுமார் 2.8 கிலோமீட்டர் (1.7 மைல்) தொலைவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நிலைமையை மதிப்பிடுவதற்காகச் சீனாவின் அவசரகால மேலாண்மை அமைச்சகம் நிபுணர்களை விரைவாக ஒருங்கிணைத்துள்ளதுடன், கெய்ரோங் (Gyirong) துறைமுகத்திற்கு அருகில் இருந்த மீட்புப் பணியாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


