மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள அரச வைத்தியசாலையில், தனது முதல் குழந்தையைப் பிரசவித்த சில மணி நேரங்களிலேயே 25 வயதான கல்பனா மிஸ்ரா என்ற பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
இறப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, அவர் தனது குடும்பத்தினரிடம் அழுது தன்னை அங்கிருந்து அழைத்துச் செல்லுமாறு கெஞ்சியுள்ள நிலையிலேயே இவ்வாறு பிரசவத்திற்கு பின்னர் உயிரிழந்துள்ளார்.
இதன் காரணமாகவே குறித்த பெண்ணின் மரணம் தற்போது அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிகிச்சைக்கு முன்னர் உயிரிழந்த பெண், “இவர்கள் சிகிச்சை அளிக்கும் முறையைப் பார்த்தால் என்னைக் கொன்றுவிடுவார்கள் போலிருக்கிறது. நான் உயிர் பிழைக்க மாட்டேன். தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள், என் உயிருக்கு ஆபத்து உள்ளது” என்று தனது தாயிடம் கூறிய காட்சி மரணத்திற்கு முன் எடுக்கப்பட்ட காணொளியில் பதிவாகியுள்ளது.
இவ்வாறான ஒரு நிலையில், தனது தாயிடம் அழுத பெண்ணும் அவரது பிறந்த குழந்தையும் சிகிச்சையின் பின்னர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தனர்.
ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த கல்பனா, பிரசவத்திற்காக ஓகஸ்ட் 25 ஆம் திகதி இரவு அரச வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓகஸ்ட் 26 இரவு 8:30 மணியளவில் அறுவை சிகிச்சை (C-section) மூலம் குழந்தை பிறந்தது. ஆனால், பிரசவம் முடிந்த சிறிது நேரத்திலேயே தாயும் சேயும் உயிரிழந்தனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, கல்பனா மிகுந்த மனவேதனையுடன் கூச்சலிட்டு, வார்டை விட்டு வெளியேற முயன்ற காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், அங்கிருந்த செவிலியர்கள் அவரைத் தடுத்து அமைதிப்படுத்த முயன்றனர்.
தனது ஒரே மகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி கல்பனாவின் தந்தை ராம்சரண் மிஸ்ரா நியாயம் கேட்டுள்ளார். “மருத்துவர்களிடம் என் மகளைப் பரிசோதிக்குமாறு பலமுறை கெஞ்சியும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. தவறான மற்றும் தாமதமான சிகிச்சையே அவளது மரணத்திற்குக் காரணம். அறுவை சிகிச்சையின் போது கொடுக்கப்பட்ட மயக்க மருந்து (Anaesthesia) அதிக அளவாக இருந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம்” என்று அவர் குற்றம் சாட்டினார்.
இச்சம்பவத்தைக் கண்டித்து கல்பனாவின் உறவினர்கள் வைத்தியசாலை வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் 4 மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடற்கூறாய்வுக்கு (Post-mortem) அனுமதிக்க மாட்டோம் என அவர்கள் மறுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, வைத்தியசாலை தலைமை அதிகாரி (Dean) டாக்டர் சுனில் அகர்வால் மற்றும் கண்காணிப்பாளர் டாக்டர் ராகுல் மிஸ்ரா ஆகியோர் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் முடிவில், மாவட்ட வைத்தியசாலை மருத்துவர்கள் மூலம் உடற்கூறாய்வு செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது.
முதற்கட்ட நடவடிக்கையாக, பணியில் இருந்த சாதனா வர்மா மற்றும் சீமா முஜால்டே ஆகிய இரு செவிலியர்கள் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளனர். மேலும், உயர்நிலைக் குழு விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வைத்தியசாலை நிர்வாகம் மருத்துவர்களின் அலட்சியத்தை மறுத்துள்ளது. “நோயாளிக்கு மருத்துவ விதிமுறைகளின்படியே சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் தரப்பில் எந்தத் தவறும் இல்லை. மயக்க மருந்துக்குப் பின் நோயாளி ஏன் சுயநினைவு பெறவில்லை என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று வைத்தியசாலை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.


