Wednesday, July 22, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்ஜனாதிபதியின் புனித ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

ஜனாதிபதியின் புனித ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும், இணையற்ற தியாகத்தையும் அடையாளப்படுத்தும் இந்த ஹஜ் கொண்டாட்டமானது, இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஐந்தாவது கடமையான புனித ஹஜ் யாத்திரையின் காரணமாக தனித்துவம் பெறுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (28) முஸ்லிம்களினால் கொண்டாடப்படும் புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு அவர் வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெருக்கடிக்கு மேல் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள இவ்வுலகில், மனிதர்களுக்கிடையில் நிலவ வேண்டிய பிணைப்பின் மகத்துவத்தைப் பற்றிய பரந்ததொரு முன்மாதிரியை ஹஜ் பெருநாள் வழங்குகின்றது.

தனிப்பட்ட அந்தஸ்துகளுக்கு அப்பாற்பட்டு, உலகின் நாலாதிசைகளிலிருந்தும் வருகை தரும் அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து மத வழிபாடுகளை நிறைவேற்றும் இச்சந்தர்ப்பமானது, சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் குறித்த சிறந்ததொரு முன்மாதிரியை உலகிற்கு எடுத்துச் சொல்கிறது என்று தாம் நம்புவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மத்திய கிழக்கின் யுத்த சூழ்நிலை காரணமாக முழு உலகமும் எதிர்நோக்கியுள்ள கடினமான சவால்களுக்கு மத்தியிலும், மக்கா நகருக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் முஸ்லிம்கள் இப்ராஹீம் நபி அவர்கள் தனது வாழ்நாளில் செய்த எல்லையற்ற தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறார்கள்.

சுயநலத்திற்குப் பதிலாகப் பொதுநலம் மேலோங்கிய, அமைதியும் ஒற்றுமையும் நிறைந்த, ஒத்துணர்வுள்ள மனித சமூகத்தைக் கட்டியெழுப்புவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும். அந்தப் பயணத்தில், அமைதி, சகோதரத்துவம் மற்றும் தியாகத்தைப் பிரதிபலிக்கும் ஹஜ்ஜுப் பெருநாளின் வழிகாட்டல்களை எமது வாழ்க்கைக்கு மென்மேலும் நெருக்கமாக்கிக் கொள்ளுமாறு அனைவரிடமும் கோருவதாக ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஆன்மீக விழுமியங்களால் இலங்கைச் சமூகத்தை மேலும் போஷித்து, அனைவருக்கும் பயன் கிடைக்கக்கூடிய அபிவிருத்தியடைந்த நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்காகச் சகோதரத்துவத்துடன் முன்னோக்கிச் செல்லுமாறு சகலருக்கும் அழைப்பு விடுப்பதோடு, இந்நாட்டிலும் உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களுக்கு இனிய ஈதுல்-அழ்ஹா பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments