Monday, June 8, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்சென்னையில் பகுதிநேர ஆசிரியர்கள் 7-வது நாளாக தர்ணா போராட்டம்

சென்னையில் பகுதிநேர ஆசிரியர்கள் 7-வது நாளாக தர்ணா போராட்டம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் திடீரென சாலையின் நடுவே படுத்தும், அமர்ந்தும் தர்ணா போராட்டம் செய்த பகுதிநேர ஆசிரியர்களை காவல்துறை குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர்.

சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ அலுவலகம் அருகில் 7-வது நாளாக, பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பதாகைகள் ஏந்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் நடுவே, (போராட்ட களத்தில் இருந்து) பகுதி நேர ஆசிரியர்கள் திடீரென சாலையை நோக்கி ஓடி, சாலையின் நடுவே அமர்ந்தும், சாலையில் படுத்தும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள் சிலர், இந்த பகுதியில் சென்ற அரசு பேருந்தை மறித்து, பேருந்தின் முன்பு சாலையில் படுத்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால், காவல்துறை விரைந்து சென்று அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி காவல்துறை பேருந்தில் ஏற்றி அழைத்து சென்றனர். ஆயினும் சில ஆசிரியர்கள் காவல்துறையிடம் செல்ல மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் வலுக்கட்டாயமாக காவல்துறை கைது செய்யும் விதமாக பேருந்தில் ஏற்றினர். இதனை தொடர்ந்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறை போராட்டக்காரர்களை விலக்கி, போக்குவரத்தையும் சீர் செய்தனர். இதனால் சிறிது நேரம் இந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போராட்டத்தின் நடுவே, செய்தி பணியில் ஈடுபட்டிருந்த செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுடனும், காவல்துறை வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து சாலையின் நடுவே கயிறு கட்டி போராட்டக்காரர்களை தடுத்து காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர ஊர்தி நிறுத்தப்பட்டு, 30-க்கும் மேற்பட்ட காவலரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக போராட்டத்தின்போது, திடீரென சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சுகந்தி என்ற ஆசிரியை மயக்கமடைந்தார். உடனே அங்கிருந்த சக ஆசிரியர்கள் மற்றும் காவல் துறையினர் அவரை அவசர ஊர்தியில் ஏற்றி சென்று மருத்துவமனைக்கு அழைத்து சென்றது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments