இந்தியாவின் தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குளிர்காலத்தை முன்னிட்டு ஏற்படும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் இன்று (நவம்பர் 1) முதல் அமுலுக்கு வந்துள்ளன.
குளிர்காலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்கொள்ளும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
பழைய வாகனங்களுக்குத் தடை
டெல்லிக்கு வெளியே பதிவு செய்யப்பட்டு, BS-VI மாசு உமிழ்வு தரநிலையைப் பூர்த்தி செய்யாத வாகனங்கள் டெல்லிக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நொய்டா, குருகிராம், பரிதாபாத் மற்றும் காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 10 இலட்சம் பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் டெல்லிக்குள் நுழைவது தடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மின்சார வாகனங்கள், CNG வாகனங்கள் மற்றும் அவசரகால சேவை வாகனங்களுக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணிகளுக்குத் தடை
காற்று மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடிய கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு நவம்பர் 1ஆம் திகதி முதல் ஜனவரி 31ஆம் திகதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், அரசின் பொதுக் கட்டமைப்புத் திட்டங்கள் உள்ளிட்ட சில திட்டங்களுக்கு விதிவிலக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
50 சதவீத பணியாளர்களுக்கு வீட்டிலிருந்து வேலை
அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தமது பணியாளர்களில் 50 சதவீதத்தினரை அலுவலகத்தில் பணியாற்றச் செய்யவும், ஏனைய 50 சதவீதத்தினருக்கு வீட்டிலிருந்து பணியாற்றும் (Work From Home) வசதியை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
அரச அலுவலகங்களின் நேரங்களில் மாற்றம்
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் அரச அலுவலகங்களின் வேலை நேரங்களிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி, டெல்லி மாநகராட்சி அலுவலகங்கள் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரையும், ஏனைய அரச அலுவலகங்கள் காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரையும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல பகுதிகளில் வாகன நிறுத்தக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (PUC) இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கக்கூடாது என எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குளிர்காலத்தில் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றின் தரம் மேலும் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்தக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.


