ஈரான் மீது தடைகளை மீண்டும் அமுல்படுத்தும் நடைமுறையை மீள புதுபிக்க கோரும் அறிக்கையொன்றில், அமெரிக்கா மேலும் 66 நாடுகளுடன் இணைந்து கையெழுத்திட்டுள்ளதாக அந்த நாட்டு வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஈரான் மீது விரிவான ஐ.நா தடைகளை மீண்டும் கொண்டுவந்த 2025 ஆம் ஆண்டின் வழிமுறையின் முதலாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டின் அணுசக்தி ஒப்பந்தத்தை ஈரான் மீறியதாக மேற்கத்தேய நாடுகள் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, 2025 இல் ஈரான் மீது மீண்டும் தடைகள் விதிக்கப்பட்டன.
இந்த தடைகளை ஐ.நா நிபுணர்கள் தொடர்ந்து கண்காணிப்பதற்கு அதிகாரமளிக்கும் அமெரிக்க ஆதரவு தீர்மானத்தை, கடந்த மாதம் ஐ.நா பாதுகாப்புச் சபையில் ரஷ்யாவும் சீனாவும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரித்தன.
இருப்பினும், அணுஆயுதங்களைத் தயாரிக்கவோ அல்லது ஒப்பந்தத்தை மீறவோ இல்லை ஈரான் மறுத்து வருகிறது.
அமெரிக்கா மற்றும் அதன் ‘பரவல் தடுப்பு பாதுகாப்பு முன்முயற்சி’ நட்பு நாடுகள் வெளியிட்டுள்ள இந்த கூட்டு அறிக்கை, மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அனைத்து ஐ.நா உறுப்பு நாடுகளும் மதித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒப்பந்த மீறல்களை நிறுத்துமாறும், சர்வதேச அணுஆயுதப் பரவல் தடை உடன்படிக்கைகளுக்குத் திரும்புமாறும், சர்வதேச அணுசக்தி அமைப்புடன் (IAEA) வெளிப்படைத்தன்மையுடன் ஒத்துழைக்குமாறும் ஈரானிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


