ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கிரிக்கெட்டில் மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை 63 ஓட்டங்களால் வீழ்த்திய இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போதிலும், தரிந்து ரத்நாயக்கவின் அதிரடி 65 ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளுக்கு 165 ஓட்டங்களைப் பெற்றது. அணித்தலைவர் சஹான் அரச்சிகே 33 ஓட்டங்களைப் பெற்றார்.
166 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 4 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 17.3 ஓவர்களில் 102 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இலங்கை சார்பில் நுவன் துஷார, தரிந்து ரத்நாயக்க, விஜயகாந் வியாஸ்காந்த் மற்றும் வனுஜ சஹான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


