Monday, June 8, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்அமித்ஷா, எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக அரசே பதில் - மு.க.ஸ்டாலின்

அமித்ஷா, எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக அரசே பதில் – மு.க.ஸ்டாலின்

அதிக வேலைவாய்ப்பு வழங்கிய மாநிலங்கள் பட்டியலில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

     ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரையிலான 2023-24 நிதியாண்டுக்கான வருடாந்திர தொழில் கணக்கெடுப்பு முடிவுகளை மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் தொழில்துறையில் அதிக வேலைவாய்ப்பு வழங்கிய மாநிலங்கள் பட்டியலில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. மேலும் 2-வது இடத்தில் குஜராத், 3-வது இடத்தில் மராட்டியம், 4வது இடத்தில் உத்தரப்பிரதேசம் மற்றும் 5வது இடத்தில் கர்நாடகா மாநிலமும் இடம்பெற்றுள்ளன. இதன்படி நாட்டின் வேலைவாய்ப்புகளில் மாநிலங்களின் பங்களிப்பில் தமிழ்நாடு 15 சதவீதம் பங்கைக் கொடுத்துள்ளது என்றும், குஜராத் (13%), மகாராஷ்டிரா (13%), உத்தரப்பிரதேசம் (8%) மற்றும் கர்நாடகா (6%) அடுத்தடுத்த இடங்களில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியாவின் தொழில்துறை பணியாளர்களின் மையமாக தமிழ்நாடு உள்ளது…. “திராவிடத்தால் வாழ்கிறோம்! திராவிடமே நம்மை உயர்த்தும்! எல்லோரையும் வாழ வைக்கும். மத்திய உள்துறை அமித்ஷா முதல் எடப்பாடி பழனிசாமி வரை திமுக ஆட்சியை பழித்துரைக்கும் அனைவருக்கும் மத்திய பாஜக அரசே தந்துள்ள பதில்’ சட்டம் ஒழுங்கைப் பேணிக்காத்து, தொழில் செய்வதற்கான சூழலை மேம்படுத்தி, தடையற்ற மின்சாரம் – போக்குவரத்து வசதிகள் என அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கி, வேலைக்குத் தேவையான திறன்களை இளம் தலைமுறையினருக்கு அளித்து நாம் நாளும் தீட்டிய திட்டங்களால் இந்தச் சாதனை சாத்தியமாகி இருக்கிறது! திராவிட மாடல் ஆட்சியின் சாதனைச் சரித்திரம் தொடரும்! அரசியல் காழ்ப்புணர்வில் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக அள்ளிவீசப்படும் அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை என மக்கள் புறந்தள்ளுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments