யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த சிலையை பொலிஸார் அகற்றி எடுத்துச் சென்ற நிலையில், சிலை வைக்கப்பட்டிருந்த இடத்தில் மலர் மாலை வைத்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வின் ஆரம்ப நாளான கடந்த 15ஆம் திகதி குறித்த நினைவாலயத்தில் வெண்கல சிலை வைக்கப்பட்டது. தொடர்ந்து 12 நாட்கள் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையில், நேற்று (26) இறுதி நாள் நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்நிலையில், இன்று (27) யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான 20க்கும் மேற்பட்ட பொலிஸார் இரண்டு பொலிஸ் வாகனங்களில் நினைவாலயத்திற்கு சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த வெண்கல சிலையை பெயர்த்து எடுத்துச் சென்றுள்ளனர்.
சிலையை பொலிஸார் அகற்றிச் சென்ற சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, நினைவாலயத்தில் சிலை வைக்கப்பட்டிருந்த இடத்தில் மலர் மாலை வைக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.


