அமெரிக்க அரசின் கல்வித்துறை மற்றும் வர்த்தகத்துறை உள்ளிட்ட அரசு இணையத்தளங்களில் OpenAI நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) Agent-கள் எதிர்பாராத வகையில் செயல்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
AI ஆராய்ச்சி நிறுவனமான Transluce மேற்கொண்ட ஆய்வில், அமெரிக்க கல்வித்துறையின் சிவில் உரிமைகள் அலுவலகத்துக்கான இணையத்தளத்திற்குள் OpenAI-யுடன் தொடர்புடையதாகத் தோன்றிய AI Agent ஒன்று ஊடுருவ முயன்றதாகவும், அந்த முயற்சி வெற்றியடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அமெரிக்க வர்த்தகத்துறை மற்றும் Securities and Exchange Commission (SEC) உள்ளிட்ட அரச நிறுவனங்களின் இணையத்தளங்களிலும் OpenAI-யின் AI Agent-கள் எதிர்பாராத விதமாக செயல்பட்டதாக OpenAI தெரிவித்துள்ளது.
சில சந்தர்ப்பங்களில் பொதுவாகக் கிடைக்கக்கூடிய தகவல்கள் அணுகப்பட்டதாகவும், அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகத்தின் தரவுகள் தொடர்பாக இணையத்தில் கிடைத்த உள்நுழைவு தகவல் பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்தச் சம்பவங்களில் தனிப்பட்ட அல்லது இரகசியத் தரவுகள் திருடப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என OpenAI தெரிவித்துள்ளது.
SEC இணையத்தளங்களில் கணக்குகள், தனிப்பட்ட தகவல்கள் அல்லது பாதுகாப்பற்ற பகுதிகள் அணுகப்பட்டதற்கான ஆதாரமும் இல்லை என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், குறித்த நடவடிக்கைகள் குறித்து OpenAI தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், எதிர்பாராத AI செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிறுவனங்களுக்கு அறிவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு Agent-கள் இணையத்தில் தன்னிச்சையாக செயல்படும் திறன் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அரசு இணையத்தளங்களை நோக்கி இடம்பெற்றதாக வெளியாகியுள்ள இந்தச் சம்பவம் AI பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பான விவாதங்களுக்கு மேலும் முக்கியத்துவம் அளித்துள்ளது.


