Wednesday, July 22, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்செம்மணியில் அகழ்வுப் பணிகளை ஆராய்ந்த ஐரோப்பிய ஒன்றிய குழு

செம்மணியில் அகழ்வுப் பணிகளை ஆராய்ந்த ஐரோப்பிய ஒன்றிய குழு

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் இன்று புதன்கிழமைநேரில் பார்வையிட்டனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, நெதர்லாந்து நாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட 8 உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர் இதில் பங்கேற்றிருந்தனர்.

செம்மணி, சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியை ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர் நேரில் பார்வையிட அனுமதி கோரி, கடந்த வெள்ளிக்கிழமை காணாமல்போனோர் அலுவலகச் சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதனைப் பரிசீலித்த நீதிமன்றம், அன்றைய தினமே அதற்கான அனுமதியை வழங்கியிருந்தது.

இதற்கமைய, இன்று புதன்கிழமை முற்பகல் 9 மணியளவில் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கார்மென் மொரேனோ, ஜேர்மனித் தூதுவர் கலாநிதி பெலிக்ஸ் நியுமன், பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட், இத்தாலித் தூதுவர் டாமியானோ பிராங்கோவிக் மற்றும் நெதர்லாந்து தூதுவர் விபே டி போயர் ஆகியோர் அகழ்வு களத்துக்குச் சென்றனர்.

இவர்களுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதித் தூதுக்குழுத் தலைவர் திருமதி கலியா அகிஷேவா, ஒத்துழைப்புப் பிரிவுத் தலைவர் கலாநிதி ஜோஹன் ஹெஸ், தொடர்பாடல் ஒருங்கிணைப்பாளர் செல்வி சாரா பொன்சேகா சில்வா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

சுமார் ஒரு மணித்தியாலம் இந்தப் பகுதியைப் பார்வையிட்ட தூதுவர்கள் குழுவினர், அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிபுணர் குழுவினரையும் சந்தித்துக் கலந்துரையாடி நிலவரங்களைக் கேட்டறிந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments