கொழும்பு, காலிமுகத்திடலில் அண்மையில் 5,000 பரதநாட்டியக் கலைஞர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட “சங்கமம் 2026” பரதநாட்டிய உலகச் சாதனை நிகழ்வு தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசாரச் செயலாளரும் பிரபல சமூக செயற்பாட்டாளருமான துமிந்த நாகமுவ ஆகியோர் இணைந்து இந்த முறைப்பாட்டை ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளனர்.
இன்று முறைப்பாட்டைச் சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்கள், கடந்த ஜூன் 14ஆம் திகதி நடைபெற்ற இந்த நாட்டிய நிகழ்வானது, கலைச் சாதனை என்ற போர்வையில் இலங்கையிலுள்ள ஏழைத் தமிழ் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை ஏமாற்றி நடத்தப்பட்ட ஒரு அப்பட்டமான வணிகச் செயற்பாடு எனத் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
பெருந்தோட்டம் மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் உத்தியோகபூர்வ முகப்புத்தகப் பதிவுகளின்படி, அவரது நேரடி வேண்டுகோள் மற்றும் வழிகாட்டலின் கீழேயே ‘சங்கமம் குளோபல் அகாடமி’ மற்றும் ‘சங்கமளியா ஹாலிடேஸ்’ ஆகிய தனியார் நிறுவனங்கள் இந்த நாட்டிய நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தியுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஓர் அரச பிரதி அமைச்சர் நேரடியாகச் சம்பந்தப்பட்ட தேசிய அளவிலான விவகாரத்தில், முற்றிலும் தனியார் நிறுவனங்கள் மூலம் நாட்டிய மாணவர்களிடமிருந்து தலா 4,500 ரூபா முதல் 6,000 ரூபா வரை நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு, அவை அரச திறைசேரிக்குச் செல்லாமல் தனியார்களின் பெயர்களிலுள்ள வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளன என்று அவர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினர்.
இந்த நிகழ்வுக்கு எந்தவொரு அமைச்சோ அல்லது அரச துறையோ முறையான நிதி உத்தரவாதத்தையோ அல்லது தணிக்கைக் கட்டுப்பாட்டையோ வழங்கவில்லை. இது போன்றதொரு வரலாற்று நிகழ்வை இலங்கை கலாசார அமைச்சு அல்லது சுற்றுலாத்துறை அமைச்சு மூலம் உத்தியோகபூர்வமாக நடத்தியிருந்தால், அதன் மூலம் கிடைத்த கோடிக்கணக்கான வருமானம் நாட்டுக்குக் கிடைத்து மீண்டும் எமது மக்களுக்கே சென்றிருக்கும். ஆனால், இங்கு தனியாருக்குச் சாதகமான முறையில் பிரதி அமைச்சர் சட்டவிரோதமாகச் செயற்பட்டுள்ளார் என்று அவர்கள் சாடினர்.
தற்போது பிரம்மாண்ட நிகழ்வு முடிவடைந்த பின்னரும், மாணவர்களுக்கான பங்களிப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்காக அந்தத் தனியார் நிறுவனங்கள் மேலும் 2,500, 3,000 மற்றும் 12,000 ரூபா எனத் தொடர்ந்து பணம் கேட்டுப் பெற்றோர்களை வற்புறுத்தி வருவதாகத் தெரிவித்த செயற்பாட்டாளர்கள், தூரப் பிரதேசங்கள் மற்றும் மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் இருந்து வந்த நடுத்தர வர்க்க மாணவர்களுக்குத் தங்குமிடமோ, உணவோ அல்லது பாதுகாப்போ ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும், சொந்தச் செலவில் வந்த மாணவர்களுக்கு 25,000 முதல் ஒரு இலட்சம் ரூபா வரை கடன் சுமை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை வெளியிட்டனர்.
இலங்கை மாணவர்களின் அரும் உழைப்பையும், கலைத் திறனையும் சுயநலமாகப் பயன்படுத்தி, இந்தியாவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனமும், ஒரு நாட்டிய ஆசிரியை மட்டுமே உலகச் சாதனைப் பட்டத்தைப் பெறுவதற்காக எமது நாட்டு மக்களின் உழைப்பு கொடூரமாகச் சுரண்டப்பட்டுள்ளது முற்றிலும் கண்டிக்கத்தக்கது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் இது தொடர்பான அனைத்து வங்கிப் பரிமாற்ற ரசீதுகள் மற்றும் முகப்புத்தக ஆதாரங்களைச் சமர்ப்பித்துள்ளதாகக் குறிப்பிட்ட செயற்பாட்டாளர்கள், உடனடியாக இது குறித்து விசேட விசாரணை நடத்தப்பட்டு, ஏழை மாணவர்களிடம் ஏமாற்றி வசூலிக்கப்பட்ட பணம் மீண்டும் முழுமையாகத் திருப்பி அளிக்கப்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட பிரதி அமைச்சர் இதற்கு நாடாளுமன்றிற்கும் நாட்டிற்கும் முழுமையாகப் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் வலுவாக வலியுறுத்தியுள்ளனர்.


