Tuesday, July 21, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு: அரசு இதுவரை தீர்மானிக்கவில்லை - நீதி அமைச்சர்

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு: அரசு இதுவரை தீர்மானிக்கவில்லை – நீதி அமைச்சர்

பிரதம நீதியரசர் உட்பட நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீட்டிப்பது குறித்து அரசு இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எதிர்க்கட்சியினரே சமூகத்தில் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்தி வருகின்றனர் என்றும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பில் தற்போதைய பிரதான பேசுபொருளாக உள்ள நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு விவகாரம் குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நீதி அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:-

நீதித்துறையின் சேவையாளர்களின் பதவிக்காலத்தை நீடிப்பது குறித்து பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட சாதக, பாதகக் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் தற்போது ஆராயப்பட்டு வருகின்றன. இதில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை.

கடந்த காலங்களில் கிடப்பில் போடப்பட்ட வழக்குகள் தற்போது துரிதமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் ஊழல்வாதிகளும், குற்றவாளிகளும், படுகொலையாளிகளும் அச்சமடைந்து, தப்பித்துக் கொள்வதற்காகவே ‘நீதித்துறைக்கு அச்சுறுத்தல்’ என்ற போலியான குற்றச்சாட்டை முன்வைத்து ஒன்றிணைகின்றார்கள்.

திருடர்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் இந்த அரசுக்குக் கிடையாது. நாட்டில் நீதித்துறை முழுச் சுதந்திரத்துடன் செயற்படுவதுடன் சட்டத்தின் ஆட்சியும் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ள நிலையில், எதிர்க்கட்சியினர் மாத்திரமே தங்களின் கலக்கத்தால் போராடி வருகின்றனர். – என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments