கியூபெக் மாகாணச் சட்டமன்றத்தில் தங்களுக்கு அதிகாரப்பூர்வ கட்சி அந்தஸ்தை வழங்காமல் ஒதுக்க முயல்வதாக, இடதுசாரி கட்சியான ‘கியூபெக் சாலிடியர்’ (Québec solidaire) குற்றம்சாட்டியுள்ளது.
ஏனைய பிரதான அரசியல் கட்சிகள் இணைந்து தங்களை ஒடுக்குவதற்கு கூட்டாகச் செயல்படுவதாக அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அலெக்சாண்டர் லெடூக் (Alexandre Leduc) தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற மாகாணத் தேர்தலில் கியூபெக் சாலிடியர் கட்சி 9 இடங்களை மட்டுமே கைப்பற்றியதுடன், 12.42 சதவீத வாக்குகளைப் பெற்றது.
கியூபெக் சட்டமன்ற விதிகளின்படி, அதிகாரப்பூர்வ கட்சி அந்தஸ்தைப் பெற குறைந்தபட்சம் 12 இடங்களிலோ அல்லது 20 சதவீத வாக்குகளையோ பெற்றிருக்க வேண்டும்.
இந்தத் தகுதியை எட்டாத காரணத்தினால், அக்கட்சிக்குச் சட்டமன்றத்தில் ஆய்வுக்கான நிதி மற்றும் கூடுதல் பேசுவதற்கான நேரம் உள்ளிட்ட சலுகைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து கருத்துத் தெரிவித்துள்ள அலெக்சாண்டர் லெடூக், ஆளுங்கட்சியான பார்ட்டி கியூபெக்வா (Parti Québécois), லிபரல் கட்சி (Liberals) மற்றும் கன்சர்வேடிவ் கட்சி ஆகியவை தங்களைச் சட்டமன்றத்திலிருந்து ‘நீக்க’ அல்லது தங்களை முடக்கவென, ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளதாகக் குற்றம்சாட்டினார்.
ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பணிகளைச் செய்யத் தேவையான நிதியும் முறையான அந்தஸ்தும் அவசியமானது என்று அவர் வலியுறுத்தினார்.
முந்தைய தேர்தல்களில் குறைந்த உறுப்பினர்களைக் கொண்டிருந்த போதிலும் விதிவிலக்குகள் அளிக்கப்பட்டு கட்சிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதை ‘கியூபெக் சாலிடியர்’ (Québec solidaire) கட்சியின் தரப்பு சுட்டிக்காட்டுகிறது.
குறிப்பாக, கடந்த 2022 ஆம் ஆண்டு வெறும் 3 இடங்களைப் பெற்ற பார்ட்டி கியூபெக்வா கட்சிக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்பட்டதை ‘கியூபெக் சாலிடியர்’ (Québec solidaire) கட்சியினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனிடையே, சமீபத்திய தேர்தலில் அனைத்து இடங்களையும் இழந்த ‘கொவாலியன் அவெனிர் கியூபெக்’ (CAQ) கட்சியும், கியூபெக் சாலிடியர் கட்சிக்கு அதிகாரப்பூர்வ அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு, தனது ஆதரவைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.


