இந்தோனேசியாவின் ஜாவா கடற்பரப்பில் மோசமான வானிலை காரணமாக பயணிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய நிலவரப்படி, இந்த கப்பல் விபத்தில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 130 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“Virgo Transport 8” என்ற குறித்த கப்பல் 243 பேருடன் கிழக்கு ஜாவாவில் உள்ள சுரபாயாவிலிருந்து தெற்கு கலிமந்தனில் உள்ள பஞ்சர்மசினை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது.
கடுமையான வானிலை மற்றும் கடல் சீற்றத்துக்கு மத்தியில் கப்பல் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 113 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 107 பேர் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த 6 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து காணாமல் போன 130 பேரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கப்பல் மூழ்கியதா அல்லது கவிழ்ந்ததா என்பது தொடர்பில் ஆரம்ப தகவல்களில் குழப்பம் காணப்பட்ட நிலையில், கப்பல் கவிழ்ந்ததாகவே இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விபத்துக்கான துல்லியமான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


