Friday, July 24, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்இந்திய டெஸ்ட் அணியின் புதிய தலைவர் கில்; அறிமுகமாகிறார் தமிழக வீரர் சாய் சுதர்சன்

இந்திய டெஸ்ட் அணியின் புதிய தலைவர் கில்; அறிமுகமாகிறார் தமிழக வீரர் சாய் சுதர்சன்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளதுடன் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் இந்தியாவின் புதிய சகாப்தம் ஆரம்பமாகவுள்ளது.

ரவிச்சந்திரன் அஷ்வின், முன்னாள் தலைவர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராத் கோஹ்லி ஆகிய மூவரும் ஓய்வுபெற்றதை அடுத்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முழுநேர தலைவராக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

‘இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவராக நியமிக்கப்பட்டதை மிகப் பெரிய கௌரவமாகவம் பாக்கியமாகவும் கருதுகிறேன். ஆடுகளத்தில் சிறந்த ஆற்றல்கள், ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றுக்கு முன்னுதாரணமாக இருந்து அணியை வழிநடத்துவேன்’ என ஷுப்மான் கில் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக ஜூன் மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருடன் தனது தலைமைப் பதவியை 25 வயதான ஷுப்மான் கில் தொடங்கவுள்ளார்.

வலதுகை துடுப்பாட்ட வீரரான ஷுப்மான் கில், இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்களுடன் 1893 ஓட்டங்களை மொத்தமாக பெற்று 35.05 என்ற சராசரியைக் கொண்டுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியின் உதவித் தலைவராக ரிஷாப் பான்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சியை இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடருடன் இந்தியா ஆரம்பிக்கவுள்ளது.

சாய் சுதர்சன் அறிமுக வீரர்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முன்னிட்டு அஜித் அகார்கரின் தலைமையிலான தெரிவுக் குழுவினர் பெயரிட்டுள்ள 18 வீரர்களைக் கொண்ட இந்திய குழாத்தில் சென்னையைப் பிறப்பிடகமாகக் கொண்ட தமிழக துடுப்பாட்ட வீரர் சாய் சுதர்சன் அறிமுக வீரராக இடம்பெறுகிறார்.

சாய் சுதர்சன் 3 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

29 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள சாய் சுதர்சன் 7 சதங்கள் உட்பட 1957 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அவரது அதிகூடிய இன்னிங்ஸ் எண்ணிக்கை 213 ஓட்டங்களாகும்.

அவர் பெரும்பாலும் யஷஸ்வி ஜய்ஸ்வாலுடன் ஆரம்ப வீரராக களம் இறங்குவார் எனவும் விராத் கோஹ்லியின் 4ஆம் இலக்கத்தை வழமையான ஆரம்ப வீரர்களில் ஒருவரான கே.எல். ராகுல் நிரப்புவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கில் மற்றும் ரிஷாப் பான்ட் ஆகியோருடன் சிரேஷ்ட வீரர்களான கே.எல். ராகுல், ஜஸ்ப்ரிட் பும்ரா, ரவிந்த்ர ஜடேஜா, மொஹமத் சிராஜ் ஆகியோரும் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

கடந்த ஓரிரு வருடங்களாக இந்திய அணியில் இடம்பெற்றுவந்த த்ருவ் ஜுரெல், ஆகாஷ் தீப் ஆகியோருக்கும் இந்திய குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குழாம்: ஷுப்மான் கில் (தலைவர்), ரிஷாப் பான்ட் (உதவித் தலைவர்), யஷஸ்வி ஜய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிட்டிஷ் குமார் ரெட்டி, ரவிந்த்ர ஜடேஜா, த்ருவ் ஜுரெல், வொஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ஜஸ்ப்ரிட் பும்ரா, மொஹமத் சிராஜ், ப்ராசித் கிரிஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments