அமெரிக்காவில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தல், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்பாக ஜனநாயகக் கட்சியினரால் பார்க்கப்படுகிறது.
எனினும், கனடா – அமெரிக்கா இடையிலான பதற்றமான இருதரப்பு உறவில் இந்தத் தேர்தல் மூலம் ஸ்திரத்தன்மை ஏற்படும் என எதிர்பார்க்கும் கனேடியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சக்கூடும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த பாதுகாப்பானதாகக் கருதப்பட்ட பல தொகுதிகளிலும் தற்போது போட்டி தீவிரமடைந்துள்ளது. இதனால், அமெரிக்க காங்கிரஸின் கட்டுப்பாடு ஜனநாயகக் கட்சியிடம் மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் பேசப்படுகிறது.
ஈரான் மீதான அமெரிக்காவின் செல்வாக்கற்ற போர், எரிசக்தி விலைகளின் அதிகரிப்பு மற்றும் பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மக்கள் ஆதரவு குறைந்து வருவதாகக் கருத்துக் கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.


