சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் இளைஞரான சிவராசா அனோஜனுக்கு மனிதநேய அடிப்படையில் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அக்கட்சி, மத நிந்தனைக்காக ஒரு மனிதனின் உயிரைப் பறிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளது.
அதேவேளை, எந்தவொரு மதத்தையும் அவமதிப்பது அல்லது மத வெறுப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள கட்சி, இவ்வாறான சம்பவங்களின் பின்னணியில் காணப்படும் இன, மத மற்றும் மொழி வேறுபாடுகளையும் சமூக முரண்பாடுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், அனோஜன் விவகாரத்தை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதையும் தமிழ் – முஸ்லிம் உறவுகளை பாதிக்கும் வகையில் அணுகுவதையும் தவிர்த்து, அவரது மரண தண்டனையை இரத்து செய்து விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.


