இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பினை ஏற்று, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இன்று இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கின்றார். இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய பங்காளித்துவத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும்.
தொடரும் உயர்மட்ட சந்திப்புகள் அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர் ஷேக் முகமது இந்தியாவுக்கு மேற்கொள்ளும் மூன்றாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும். கடந்த 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் துபாய் மற்றும் அபுதாபியின் பட்டத்து இளவரசர்கள் மேற்கொண்ட விஜயங்களைத் தொடர்ந்து, இந்த உயர்மட்ட சந்திப்பு நடைபெறுகின்றது.
முக்கிய இலக்குகள் இந்த சந்திப்பின் போது வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு மற்றும் எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இரு தலைவர்களும் தீவிரமாக ஆலோசிக்கவுள்ளனர். குறிப்பாக, மேற்கு ஆசியாவின் தற்போதைய சூழல் மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து இரு நாடுகளும் ஒரே மாதிரியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள நிலையில், இந்த பேச்சுவார்த்தை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.


