சென்னையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ், தனது வாழ்வியலில் தந்தை பெரியார் ஏற்படுத்திய தாக்கம் குறித்து மனம் திறந்து பேசினார்.
யுத்தத்திற்கு தயாராகிப் போனேன்! சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட மாரி செல்வராஜ், தனது காதல் திருமணத்திற்காக பெண் கேட்கச் சென்ற போது ஒரு பெரும் யுத்தமே நடக்கும் என எதிர்பார்த்ததாகக் கூறினார். “நெல்லை கிராமத்திலிருந்து சேலத்திற்கு பெண் கேட்கச் சென்றபோது, எப்படி தப்பிப்பது, எப்படி மோதுவது எனத் தயாராகவே சென்றேன். ஆனால், அந்த வீட்டின் சுவரில் இருந்த பெரியாரின் படம் என் பயத்தைப் போக்கியது. பெரியார் இருந்ததால் தான் அந்த வீட்டிற்குள் என்னால் நுழைய முடிந்தது,” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
பெரியாரைத் திட்டுவது சாதனையா? தற்போதுள்ள அரசியல் சூழலில் பெரியாரைத் விமர்சிப்பதன் மூலம் சிலர் பிரபலம் அடைய நினைப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், “பெரியாரைத் திட்டுவதால் மட்டும் ஒருவர் பெரிய சிந்தனையாளர் ஆகிவிட முடியாது. நாம் மக்களிடம் எதை விதைக்கிறோம் என்பதுதான் முக்கியம். வெறுப்பையும் வன்மத்தையும் பரப்புவது ஒருபோதும் சாதனையாகாது” எனத் தெரிவித்தார்.
மனைவியும் புத்தகங்களும் தனக்கு பெரியாரை அறிமுகப்படுத்தியது தனது மனைவிதான் எனக் குறிப்பிட்ட மாரி செல்வராஜ், பெரியார் விதைக்க விரும்பிய கருத்துச் சுதந்திரத்தையும் சமூக நீதியையும் நாம் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தினார்.


