வெலிகம பிரதேச சபை தவிசாளர் லசந்த விக்ரமசேகர கடந்த 22ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான துப்பாக்கிதாரி, ரூ. 20 இலட்சத்துக்கான ஒப்பந்தத்தின் பேரில் இந்தக் கொலையைச் செய்துள்ளார் என்று விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
“டுபாய் லொக்கா” என்ற நபர் இந்த ஒப்பந்தத்தை தமக்கு வழங்கியதாக துப்பாக்கிதாரி வாக்குமூலம் வழங்கியுள்ளார். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட உந்துருளிகளில் சந்தேக நபர்கள் தப்பிச் செல்லும் காட்சிகள், அத்துடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்கள் பிரிந்து செல்லும் காட்சிகள் சிசிடிவி கெமராக்களில் பதிவாகியிருந்தன.
அதன் அடிப்படையில் காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், கெகிராவ, பொனேகம பகுதியில் கைவிடப்பட்டிருந்த வீடொன்றில் மறைந்திருந்த பெண்ணொருவரும் இரு ஆண்களும் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
எனினும், துப்பாக்கிதாரி என்று சந்தேகிக்கப்பட்ட நபர் காவல்துறையினருடன் போராடித் தப்பிச் சென்றார். தப்பிச் சென்ற துப்பாக்கிதாரி கொழும்புக்கு வந்துள்ளமை தொலைபேசித் தரவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, காவல்துறை மற்றும் காவல்துறை விசேட அதிரடிப் படை இணைந்து கொழும்பின் பல பகுதிகளில் சோதனைகளை மேற்கொண்டன.
சந்தேகநபர் பொரளை, சஹஸ்புர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்தபோது, தனது தோற்றத்தை மாற்றும் நோக்கில் தலைமுடியை வெட்டி, தனது உடைகளையும் மாற்றிக் கொண்டுள்ளார். அவர் அங்கு ஏதோ ஒரு போதைப்பொருளை உட்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், சந்தேகநபர் தனது கைபேசிக்கு மின்னேற்றம் செய்து கொள்வதற்காக அதனை தான் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரிடம் கொடுத்திருந்தார். காவல்துறை சோதனையின்போது, அந்தத் தொலைபேசி மீட்கப்பட்டதுடன் வீட்டின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர், தொலைபேசித் தரவுகளின் கண்காணிப்பு மூலம், சந்தேகநபர் இராஜகிரிய பகுதிக்கு சென்று மாலை 6 மணியளவில் மஹரகம, நாவின்ன பகுதிக்கு சென்றமை தெரியவந்தது.
அதன்படி, காவல்துறை விசேட அதிரடிப் படை மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் உதவியுடன் அவர் நேற்றிரவு (26) மஹரகம, நாவின்ன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.


