நெதர்லாந்தின் விஜ் ஆன் சீ நகரில் நாளை தொடங்கவுள்ள ‘டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ்’ செஸ் தொடரில் உலக சம்பியன் டி. குகேஷ் களம் இறங்குகிறார். தனது முதல் சுற்றில் அவர் உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஜவோகிர் சிந்தரோவை எதிர்கொள்ள உள்ளார்.
கடந்த 2024-ம் ஆண்டு சீனாவின் டிங் லிரனை வீழ்த்தி உலக மகுடம் சூடிய பிறகு குகேஷ் பங்கேற்கும் முதல் பெரிய தொடர் இதுவாகும். கடந்த ஆண்டு இதே தொடரில் இறுதிவரை போராடி இரண்டாம் இடத்தை பிடித்த குகேஷ், இம்முறை எப்படியாவது சம்பியன் பட்டத்தை தட்டிச் செல்ல வேண்டும் என்ற உறுதியோடு உள்ளார்.
குகேஷுடன் சேர்த்து இந்தியாவின் முன்னணி வீரர்களான பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி மற்றும் அரவிந்த் சிதம்பரம் ஆகியோரும் இத்தொடரில் பங்கேற்கின்றனர். குறிப்பாக நடப்புச் சம்பியனான பிரக்ஞானந்தாவுக்கும் குகேஷுக்கும் இடையிலான போட்டி இம்முறையும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


