அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு தனது நோபல் அமைதிப் பரிசு பதக்கத்தை வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவி மரியா கொரினா மச்சாடோ வழங்கியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மச்சாடோவின் இந்தச் செயல் “அர்த்தமற்றது” மற்றும் “வேடிக்கையானது” என நார்வே நாட்டு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நோபல் பரிசைத் தீர்மானிக்கும் நோபல் கமிட்டி மற்றும் நோபல் நிறுவனம் இது குறித்து முக்கிய விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. “நோபல் பதக்கம் கைமாறலாம், ஆனால் நோபல் வெற்றியாளர் என்ற பட்டம் ஒருபோதும் மாறாது” என்று அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். மேலும், ஒருவருக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசைத் திரும்பப் பெறவோ, வேறொருவருக்கு மாற்றவோ அல்லது பகிர்ந்து கொள்ளவோ முடியாது என நோபல் நிறுவனம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற சந்திப்பின் போது, “எங்கள் நாட்டின் சுதந்திரத்திற்காக ட்ரம்ப் ஆற்றிய உழைப்பைப் பாராட்டி” இந்தப் பதக்கத்தை மச்சாடோ வழங்கினார். இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில், “எனது பணிக்காக மச்சாடோ தனது நோபல் பதக்கத்தை எனக்கு வழங்கினார். இது பரஸ்பர மரியாதையின் ஒரு சிறந்த அடையாளம்” எனப் பதிவிட்டிருந்தார்.
நார்வேயின் முன்னணி அரசியல் தலைவர்கள் ட்ரம்ப்பை ஒரு “விளம்பரப் பிரியர்” (Classic showoff) என விமர்சித்துள்ளனர். மற்றவர்களின் உழைப்பிற்குத் தான் உரிமை கோருவதில் அவர் வல்லவர் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒஸ்லோ பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜானே மட்லரி (Janne Haaland Matlary) கூறுகையில், “இது நோபல் பரிசுக்கு இழைக்கப்பட்ட அவமானம்” எனச் சாடியுள்ளார்.
வெனிசுலாவின் ஜனநாயகத்திற்காகப் போராடியதற்காக மச்சாடோவிற்கு கடந்த மாதம் ஒஸ்லோவில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால், அண்மையில் அமெரிக்காவின் தலையீட்டால் வெனிசுலாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodríguez) பதவிக்கு வந்த சூழலில், மச்சாடோ இந்தப் பதக்கத்தை ட்ரம்ப்பிற்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


