கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும்.
இதில் நேற்று முன்தினம் 4 லீக் ஆட்டங்கள் நடந்தன. இதில் ‘சி’ பிரிவில் நடந்த ஆட்டத்தில் பேயர்ன் முனிச் (ஜெர்மனி) அணி 10-0 என்ற கோல் கணக்கில் ஆக்லாந்து சிட்டியை (நியூசிலாந்து) துவம்சம் செய்தது. ஜமால் முசியாலா 3 கோலும், தாமஸ் முல்லர், ஒலிசி, கோமன் தலா 2 கோலும் அடித்தனர்.
‘பி’ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் பிரான்சை சேர்ந்த பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) அணி 4-0 என்ற கோல் கணக்கில் அட்லெட்டிகோ மாட்ரிட்டை (ஸ்பெயின்) தோற்கடித்தது. இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் போடாபோகோ (பிரேசில்) அணி 2-1 என்ற கோல் கணக்கில் சியட்டி சவுன்டெர்ஸ் எப்..சி.யை (அமெரிக்கா) வீழ்த்தியது. ‘ஏ’ பிரிவில் பால்மிராஸ் (பிரேசில்)- எப்.சி.போர்டோ (போர்ச்சுகல்) இடையிலான ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.