இலங்கையில் சைவ மக்களின் சமய மரியாதைக்கு ஏற்பட்ட அவமதிப்புகளைப் பட்டியலிட்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இறுதிப் போரின்போது காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் அடிகளாருக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டையும் அரண்மனை வாழ்வையும் துறந்து ஞானம் பெற்ற புத்த பெருமானின் சிலை, தற்போது நில ஆக்கிரமிப்பின் அடையாளமாகப் பயன்படுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு விருந்தினர்களுக்கு உரிய இராஜதந்திர மரியாதை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் அதேவேளை, நாட்டுக்குள் வாழும் அனைத்து மக்களினதும் சமய மரியாதையை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இராஜதந்திர நடைமுறைகள் மற்றும் சமய நல்லிணக்கம் தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவால் 2026 ஒக்டோபர் 22ஆம் திகதி முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ரவிகரன் எம்.பி. இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான வரலாற்று உறவுகள் மதிக்கப்பட வேண்டும் என்றும், சமய நிகழ்வொன்றில் பங்கேற்க வருகைதரும் வெளிநாட்டு உயர்மட்டப் பிரதிநிதிகளுக்கு அவர்களின் பதவி மற்றும் வருகையின் தன்மைக்கு ஏற்ப இராஜதந்திர மரியாதையும் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த விடயத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பில் அரசாங்கம் பாராளுமன்றத்திற்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கோரினார்.
அதேவேளை, உள்நாட்டில் தமிழ் மக்களின் சமய உணர்வுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.
2019ஆம் ஆண்டு முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில், நீதிமன்ற உத்தரவையும் மீறி, நூற்றுக்கணக்கான தமிழர்களின் எதிர்ப்புக்கு மத்தியில், பொலிஸார் மற்றும் படையினரின் பாதுகாப்புடன் பௌத்த பிக்குவின் உடலம் புனித தீர்த்தக்கேணிக்கு அருகில் தகனம் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும், குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலயத்தில் தமிழ் மக்கள் வழிபட்டு வந்த சூலம் காணாமல் ஆக்கப்பட்டதாகவும், வெடுக்குநாறி மலையில் சமய அடையாளங்கள் சேதப்படுத்தப்பட்டு அகற்றப்பட்டதாகவும் குறிப்பிட்ட அவர், இச்சம்பவங்களுக்கான பொறுப்புக்கூறல் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.
இறுதிப் போரின்போது காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் அடிகளாருக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பான உண்மை வெளிக்கொண்டுவரப்படவில்லை என்றும், அவருக்கான நீதி நிலைநாட்டப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் தனியார் காணியில் விகாரை அமைக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ் மக்கள் அதிகமாக வாழும் வெட்டுவாய்க்கால் பகுதியிலும் விகாரை அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட ரவிகரன் எம்.பி., இத்தகைய கட்டுமானங்கள் வழிபாட்டைத் தாண்டி நில ஆக்கிரமிப்பின் அடையாளங்களாகப் பார்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.


