Monday, March 16, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்பங்களாதேஷ் டெஸ்ட் குழாத்தில் 3 பிரதான சுழல்பந்துவீச்சாளர்கள்

பங்களாதேஷ் டெஸ்ட் குழாத்தில் 3 பிரதான சுழல்பந்துவீச்சாளர்கள்

இலங்கைக்கு எதிராக இந்த மாதம் நடுப்பகுதியில் ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை முன்னிட்டு பங்களாதேஷ் பெயரிட்டுள்ள 16 வீரர்கள் கொண்ட குழாத்தில் 3 பிரதான சுழல்பந்துவீச்சாளர்கள் இடம்பெறுகின்றனர்.

தய்ஜுல் இஸ்லாம், மெஹிதி மிராஸ் ஹசன், நயீம் ஹசன் ஆகிய மூவரே பிரதான சுழல்பந்துவீச்சாளர்களாக குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்க ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமானதென்பதை அறிந்தே பங்களாதேஷ் கிரிக்கெட் குழாத்தில் இந்த மூவரும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த மூவரும் தம்மிடையே 472 விக்கெட்களளைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

33 வயதான அனுபவசாலியான தய்ஜுல் இஸ்லாம் 228 விக்கெட்களையும் மெஹிதி ஹசன் மிராஸ் 205 விக்கெட்களையும் நயீம் ஹசன் 12 டெஸ்ட்களில் 39 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இது இவ்வாறிருக்க, இரண்டு வருட இடைவெளிக்குப் பின்னர் 31 வயதான வேகப்பந்துவீச்சாளர் ஈபாடொத் ஹொசெயன் அணியில் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 2023ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியின்போது உபாதைக்குள்ளானதால் அவர் சிகிச்சையுடன் ஓய்வுபெற்றுவந்தார்.

கடந்த சில மாதங்களில் 3 முதல் தர போட்டிகள் உட்பட 27 பிரதான போட்டிகளில் விளையாடி திறமையாக பந்து வீசியதை அடுத்து அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அவர் 20 டெஸ்ட் போட்டிகளில் 42 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.

இதேவேளை, மஹ்முதுல் ஹசன் ஜோய், தன்விர் இஸ்லாம், தன்ஸிம் ஹசன் ஆகியோரை நீக்கியுள்ள தேர்வாளர்கள், லிட்டன் தாஸ், ஹசன் முராத், காலித் அஹ்மத் ஆகியோரை குழாத்தில் இணைத்துக்கொண்டுள்ளனர்.

இலங்கையும் பங்களாதேஷும் 2025 – 2027 ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான சுழற்சி பருவகாலத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளன.

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலியில் ஜூன் 17ஆம் திகதி ஆரம்பமாவதுடன் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஜூன் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அதனைத் தொடர்ந்து இரண்டு அணிகளுக்கும் இடையிலான தலா 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரும் சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரும் நடைபெறும்.

பங்களாதேஷ் அணியினர் புனித அந்தோனியார் திருவிழா தினத்தன்று இலங்கை வருகை தரவுள்ளனர்.

பங்களாதேஷ் குழாம்

நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ (தலைவர்), ஷத்மான் இஸ்லாம், அனாமுல் ஹக் பிஜோய், மொமினுள் ஹக், முஷ்பிக்குர் ரஹிம், லிட்டன் தாஸ், மஹிதுல் இஸ்லாம், ஜேக்கர் அலி, மெஹிதி ஹசன் மிராஸ், தய்ஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், ஹசன் முராத், ஈபாடொத் ஹொசெய்ன், ஹசன் மஹ்முத், நஹித் ரானா, காலித் அஹ்மத்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments