ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற 45வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 215 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக ரிக்கெல்டன் 58 ரன் எடுத்தார்.
தொடர்ந்து 216 ரன் என்ற இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணி 20 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 54 ரன் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் ஜஸ்ப்ரீத் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நடப்பு தொடரின் தொடக்க கட்டத்தில் சொதப்பி வந்த மும்பை அணி கடைசியாக ஆடிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று வலுவாக திரும்பி வந்துள்ளது.
இந்நிலையில், மும்பை அணி இப்படி விளையாடும் போது மற்ற அணிகள் அவர்களை பார்த்து பயப்பட வேண்டும் என பியூஷ் சாவ்லா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, மும்பை அணியில் எத்தனை மேட்ச் வின்னர்கள் உள்ளார்கள் என்பதை பாருங்கள். அணியில் 11 பேரும் மேட்ச் வின்னர்களாக உள்ளனர்.
நேற்று ரிக்கெல்டன் ஆடிய இன்னிங்ஸ், கடந்த இரு ஆட்டங்களில் ரோகித் சம்ராவின் பார்ம், மேலும் வில் ஜேக்ஸ் பந்துவீச்சில் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். நேற்று இம்பேக்ட் வீரராக வந்த பும்ராவும் சிறப்பாக செயல்பட்டார். எனவே, விஷயங்கள் மும்பை அணிக்கு சாதகமாக மாறுகின்றன.
ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தாலும் அது சரியாகவே போகிறது. மும்பை அணி வெற்றிப்பாதையில் உள்ளது. மும்பை இவ்வாறு விளையாடும் போது மற்ற அணிகள் அவர்களை பார்த்து பயப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.