மறைந்த போப் பிரான்சிஸ் உடல் அவரது விருப்பப்படியே வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி பசிலிக்காவில் அடக்கம் செய்யப்பட்டது. கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் 266வது தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார். அவரது உடல் கடந்த 23-ந் தேதி முதல் வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். நேற்று முன்தினம் மாலை வரை 90 ஆயிரத்துக்கு அதிகமானோர் போப் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 3-வது நாளாக நேற்றும் போப் பிரான்சிஸ் உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல மணி நேரம் அஞ்சலி செலுத்தினர். இதனால் புனித பீட்டர் சதுக்கம் நிரம்பி வழிந்தது. பின்னர் மாலையுடன் பொதுமக்கள் அஞ்சலி நிகழ்ச்சி நிறைவடைந்தது. பின்னர் போப் பிரான்சிஸ் உடல் வைக்கப்பட்ட பெட்டி மூடி சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு வாடிகன் நகரில் தொடங்கியது. அவரது உடலுக்கு பாரம்பரிய முறைப்படி இறுதிச்சடங்கு நடைபெற்றது. செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஏராளமான மக்கள் கூடி உள்ளனர். உலகம் முழுவதிலும் இருந்து கிறிஸ்துவ பேராயர்கள் பங்கேற்றனர்.
பின்னர் வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. அவரது விருப்பப்படியே அவருக்கு மிகவும் பிடித்தமான புனித மேரி பசிலிக்காவில் அடக்கம் செய்யப்பட்டது. போப் பிரான்சிஸ் உடல் புனித பீட்டர் பேராலயத்தில் இறுதிச்சடங்குகளை முடித்து புனித மேரி பசிலிக்காவுக்கு கொண்டு வந்ததும், ஏழைகள் மற்றும் கைவிடப்பட்டோரை கொண்ட ஒரு குழுவினர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர் போப் பிரான்சிஸ், தனது பதவிக்காலம் முழுவதும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டதை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக வாடிகன் தெரிவித்தது. சுமார் 250,000 பேர் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். 50 நாடுகளின் தலைவர்கள் உள்பட 150 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது மனைவி மெலனியா, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் கெயிர் ஸ்டார்மர், இளவரசர் வில்லியம், பிரேசில் அதிபர் லூலா டா சில்வா என பல நாடுளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் அதிபர் திரவுபதி முர்மு போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்றனர்.